300 ஆண்டுகளுக்கு முற்பட்ட நீர்வரத்து பாலம் அமைத்ததற்கான கல்வெட்டு கண்டெடுப்பு


300 ஆண்டுகளுக்கு முற்பட்ட நீர்வரத்து பாலம் அமைத்ததற்கான கல்வெட்டு கண்டெடுப்பு
x
தினத்தந்தி 1 Jan 2022 11:36 PM IST (Updated: 1 Jan 2022 11:36 PM IST)
t-max-icont-min-icon

நார்த்தாமலை அருகே, 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட, நீர்வரத்து பாலம் அமைத்ததற்கான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.

அன்னவாசல்:
கல்வெட்டு கண்டெடுப்பு 
புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை அருகே, தொடையூர் கிராமத்தில், குளத்தூர் பகுதியை ஆட்சி செய்த நமண தொண்டைமான் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, தமிழ்துறை பேராசிரியர் முத்தழகன் தலைமையில், தொல்லியல் ஆர்வலர்களான, கீரனூர் முருகபிரசாத், நாராயணமூர்த்தி, ராகுல்பிரசாத் ஆகியோரால் அக்கல் வெட்டானது, ஆய்வு செய்யப்பட்டது. இக்கல்வெட்டு குறித்து அவர்கள் கூறியதாவது:- செவ்வக வடிவ கற்பலகையில், ஏழு வரிகளில் பொறிக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டில், இடையிடையே எழுத்துக்கள் மிகவும் சேதமடைந்துள்ளன. 18-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், குளத்தூரை தலைமையிடமாகக்கொண்டு புதுக்கோட்டை மாவட்டத்தின், வடக்கு பகுதியை ஆட்சி செய்த, முதலாம் நமண தொண்டைமானின், வாசல் பிரதானி ஒருவர், நீர்வரத்து பாலம் அமைத்ததற்காக இந்த கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. 
பிரதானி 
நமண தொண்டைமானின், பேராம்பூர் மற்றும் விராலூர் கிராம கல்வெட்டுகளை போலவே, இக்கல்வெட்டிலும் "ஸ்ரீமது ரெங்க கிருஷ்ண முத்துவீர நமண தொண்டைமானார்" என குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டின் தொடக்கத்தில், "பிரமாதி வருடம் "என பொறிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இக்கல்வெட்டானது, கி.பி. 1699,  1700-ம் ஆண்டை சேர்ந்தது என கருதப்படுகிறது.
முதலாம் நமண தொண்டைமான், புதுக்கோட்டை அரசின் முதல் மன்னரான ரெகுநாதராய தொண்டைமானின் சகோதரர் என புதுக்கோட்டை அரசு ஆவணம் குறிப்பிடுகிறது. இவருடைய ஆட்சி காலத்தில் குளத்தூர் வரதராஜ பெருமாள் கோவில் மற்றும் அக்னி ஆற்றின் தொடக்கமான குளத்தூர் பெரியகுளத்தின் கலிங்கு மடை ஆகியவன கட்டப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இக்கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ள வாசல் பிரதானி என்பது பதவியை குறிப்பதாகும். அக்காலத்தில், மன்னருக்கு அடுத்த அதிகாரமிக்கவராக இருந்த தளவாய் என்ற பொறுப்பிற்கு, அடுத்த முக்கியமான பதவி பிரதானி என்பதாகும். அதாவது, இப்பதவி, இக்கால நிதியமைச்சர் பதவியாகும். 
பெருமை சேர்க்கும் விதம் 
இந்த கல்வெட்டின் அடிப்பகுதி மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுவதால், பிரதானியின் பெயர் தெளிவாக தெரியவில்லை. இருப்பினும், கல்வெட்டு பலகையானது, ஊரணியின் பழைய நீர்வரத்து பாலத்தில் வைத்து கட்டப்பட்டிருந்ததால், குளத்தினை வெட்டி, நீர்வரத்து பாலம் அமைத்ததற்கான கல்வெட்டு என கருதப்படுகிறது. தொண்டைமான் வாரிசுகள், இப்பொழுதும் வாழ்ந்து கொண்டிருப்பதால், இக்கல்வெட்டு அவர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Next Story