ஆங்கில புத்தாண்டையொட்டி பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
ஆங்கில புத்தாண்டையொட்டி பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
பழனி:
ஆங்கில புத்தாண்டையொட்டி பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
ஆங்கில புத்தாண்டு
முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனிக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஆங்கில புத்தாண்டையொட்டி பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை முதலே மலைக்கோவில், அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஏராளமானோர் தங்கள் குடும்பத்துடன் வந்தனர்.
மலைக்கோவில் செல்வதற்கான படிப்பாதை, யானைப்பாதை, மின்இழுவை ரெயில், ரோப்கார்நிலையம் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. கூட்டம் நிரம்பி வழிந்ததால் தரிசன வழிகளை தாண்டி வெளிப்பிரகாரம் வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். இதனால் தரிசனம் செய்ய சுமார் 3 மணி நேரம் காத்திருக்க நேர்ந்தது. மேலும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அலகுகுத்தியும், காவடி எடுத்தும் வந்தனர்.
போக்குவரத்து நெரிசல்
இதேபோல் பழனி திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோவில், பெரியாவுடையார் கோவில், மாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் புத்தாண்டையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்தது. மலைக்கோவில் ஆனந்தவிநாயகர் சன்னதியில் சுவாமிக்கு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
புத்தாண்டை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய பழனிக்கு வெளியூர்களில் இருந்து கார், வேன், பஸ்களில் பக்தர்கள் வந்ததால் அடிவாரம், குளத்துரோடு, கிரிவீதிகள், சன்னதிவீதி, பூங்காரோடு ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர்.
Related Tags :
Next Story