கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது
ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
கொடைக்கானல்:
ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
ஆங்கில புத்தாண்டு
‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் ஆங்கில புத்தாண்டை கொண்டாடுவதற்கு கடந்த 2 நாட்களாக தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினம் இரவு நகரில் மழை பெய்ததால் புத்தாண்டு கொண்டாட்டம் களையிழந்து காணப்பட்டது. இதற்கிடையே புத்தாண்டு தினமான நேற்று அதிகாலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர். வாகனங்கள் அணிவகுத்து வந்ததால் நகரில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது கொடைக்கானல் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.
சுற்றுலா பயணிகள்
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் நேற்று அடர்ந்த பனி மூட்டத்துடன் கூடிய சாரல் மழை அவ்வப்போது பெய்தது. இதனால் பகல் நேரத்திலேயே கடும் குளிர் நிலவியது. இருப்பினும் இந்த பருவநிலையை சுற்றுலா பயணிகள் அனுபவித்தவாறு மோயர் பாயிண்ட், பைன்மரக்காடு, பில்லர்ராக், பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, பசுமை பள்ளத்தாக்கு உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சென்று இயற்கை அழகினை கண்டு ரசித்தனர். மேலும் தங்களது செல்போன்களில் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
மேலும் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் சுற்றுலா பயணிகள் சாரல் மழையில் குடைபிடித்தபடி படகு சவாரி செய்தும், ஏரியை சுற்றி சைக்கிள் மற்றும் குதிரை சவாரி மேற்கொண்டும் உற்சாகம் அடைந்தனர். சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியதால், சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
கட்டணம் வசூல்
புத்தாண்டையொட்டி கொடைக்கானலில் உள்ள கோவில், கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். இளைஞர்கள் பலர் சாலைகளில் பட்டாசுகளை வெடித்து புத்தாண்டினை வரவேற்றனர்.
கொடைக்கானலில் கோக்கர்ஸ்வாக், பூங்கா மற்றும் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களை காண சுற்றுலா பயணிகளிடம் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே பசுமை பள்ளத்தாக்கு பகுதியிலும் நேற்று முதல் கட்டணம் வசூல் தொடங்கியுள்ளது. அதன்படி, ஒருவருக்கு ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
Related Tags :
Next Story