மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 1 Jan 2022 8:23 PM GMT (Updated: 1 Jan 2022 8:23 PM GMT)

ஆங்கில புத்தாண்டை யொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

மதுரை
ஆங்கில புத்தாண்டை யொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மீனாட்சி அம்மன் கோவில்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று அதிகாலை 5 மணியில் இருந்து பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கோவிலில் மீனாட்சி அம்மனுக்கும், சுந்தரேசுவரர் சுவாமிக்கும் சிறப்பு பூஜை நடந்தது. மேலும் மீனாட்சி அம்மன் வைர கிரீடம், தங்க பாவாடையிலும், சுந்தரேசுவரர் சுவாமி வைர நெற்றி பட்டையில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
பக்தர்கள் கூட்டம் நேரம் செல்ல, செல்ல அதிகமாக காணப்பட்டது. சுமார் 4 மணி நேரம் நீண்டவரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் அனைவரும் கோவிலுக்குள் செல்லும் போது கிருமிநாசினி மற்றும் உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. கூட்டம் அதிகமாக இருந்ததால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.
பக்தர்கள் கூட்டம்
இதேபோன்று கூடலழகர் பெருமாள் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அங்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். ஒத்தக்கடை நரசிங்கம் பெருமாள் கோவில், திருமோகூர் காளமேக பெருமாள் கோவில், தல்லாகுளம் பெருமாள் கோவில்களில் புத்தாண்டு மற்றும் சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் அதிகாலையில் இருந்தே கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு வந்திருந்தனர்.
இம்மையில் நன்மை தருவார் கோவிலில் புத்தாண்டையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நேதாஜி ரோடு தண்டாயுதபாணி முருகன் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பக்தர்கள் அதிக அளவில் வந்து முருகனை தரிசித்து சென்றனர். அனைத்து கோவில்களிலும் கூட்டம் அதிகமாக இருந்ததால் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.

Next Story