ஒரே நாளில் 64 பேருக்கு தொற்று: நெல்லை, தூத்துக்குடியில் அதிகரித்து வரும் கொரோனா 10 கர்ப்பிணிகளும் பாதிப்பு


ஒரே நாளில் 64 பேருக்கு தொற்று: நெல்லை, தூத்துக்குடியில்  அதிகரித்து வரும் கொரோனா 10 கர்ப்பிணிகளும் பாதிப்பு
x
தினத்தந்தி 1 Jan 2022 9:00 PM GMT (Updated: 1 Jan 2022 9:00 PM GMT)

நெல்லை, தூத்துக்குடியில் அதிகரித்து வரும் கொரோனா

தூத்துக்குடி:
நெல்லை, தூத்துக்குடியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 64 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனா அதிகரிப்பு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் மற்றும் அதன் உருமாறிய வைரசான ஒமைக்ரான் பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வெகுவாக குறைந்திருந்தது. ஒற்றை இலக்க எண்ணிக்கையிலேயே பாதிப்பு இருந்து வந்தது. 
ஆனால், தற்போது ஒமைக்ரான் நோய்த்தொற்று பரவும் இந்த சூழ்நிலையில் இந்த மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. 
நெல்லையில் 28 பேர்
நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் 9 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு காணப்பட்டது. புத்தாண்டு தினமான நேற்று திடீரென பாதிப்பு உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் மட்டும் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களுக்கு ஒமைக்ரான் தொற்று இருக்கிறதா? என்பதை கண்டறியும் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 49 ஆயிரத்து 822 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 49 ஆயிரத்து 301 பேர் குணமடைந்து உள்ளனர். கொரோனா பரவல் அதிகரித்து இருப்பதால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையும் நேற்று 85 ஆக உயர்ந்துள்ளது. இதையொட்டி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை வார்டை மேம்படுத்தி வருகிறார்கள்.
தூத்துக்குடியில் 36 பேர் 
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மட்டும் 36 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதில் 10 பேர் கர்ப்பிணி பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடி நகர் பகுதியில் மட்டும் 7 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56 ஆயிரத்து 650 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் குணமடைந்தனர். இதன்மூலம் மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 56 ஆயிரத்து 138 ஆக உயர்ந்துள்ளது. மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். அதே நேரத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் தனிக்கவனம் செலுத்தி வருகின்றனர்.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. தற்போது 11 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
.............

Next Story