‘மோடி எங்களை பாராட்டியது உற்சாகத்தை அளித்துள்ளது’-பெண் விவசாயி சாந்தி பேட்டி
பிரதமர் மோடி எங்களை பாராட்டியது உற்சாகத்தை அளித்துள்ளது என்று சேலம் பெண் விவசாயி சாந்தி கூறினார்.
சேலம்:
பிரதமர் மோடி எங்களை பாராட்டியது உற்சாகத்தை அளித்துள்ளது என்று சேலம் பெண் விவசாயி சாந்தி கூறினார்.
மோடி பாராட்டு
சேலம் மாவட்டம் வீரபாண்டியில் பெண்களால் வீரபாண்டி களஞ்சிய ஜீவித உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் செயற்கை உரங்களை தவிர்த்து இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி வீரபாண்டி களஞ்சிய ஜீவித உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குனர் விவசாயி சாந்தியிடம் கலந்துரையாடினார். அப்போது அவரை பாராட்டினார்.
இதுகுறித்து சாந்தி கூறியதாவது:-
பிரதமர் மோடி எங்களை பாராட்டி பேசியது மிகுந்த சந்தோஷத்தையும், உற்சாகத்தை அளித்துள்ளது. நாங்கள் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பொருட்களை கொள்முதல் செய்கிறோம். கொள்முதல் செய்யும் தினத்தன்று சந்தை விலை என்னவென்று மார்க்கெட்டிங் அலுவலகத்தில் தெரிந்து கொண்டு பின்னர் நேரடியாக சென்று பொருட்களின் தரத்தை பார்த்து சரியான எடையில் வாங்கி எங்களது வாகனத்திலேயே ஏற்றி வருகிறோம்.
பெண்களால் சாதிக்க முடியும்
வாங்கிய மறுநாளே அவர்களது வங்கி கணக்கில் பணத்தை செலுத்தி விடுவோம். எங்களது நிறுவனத்தில் 2 ஆயிரத்து 221 உறுப்பினர்கள் உள்ளனர். அதில் நான் இயக்குனராக இருப்பது பெருமை அளிக்கிறது. ஆண்கள் தான் எண்ணெயை ஆட்டும் செக்கை ஓட்ட முடியும் என்ற காலம் போய் எங்களாலும் சாதிக்க முடியும் என்று நினைத்து அதை செய்து வருகிறோம். நாங்களே மூட்டைகளை தூக்கி அதில் உள்ள பொருட்களை காயவைப்பது உள்பட அனைத்து வேலைகளையும் செய்து வருகிறோம். பெண்களால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story