கலெக்டர் அலுவலகத்தில் காணொலி காட்சி மூலம் சேலம் பெண் விவசாயியிடம் மோடி கலந்துரையாடல்


கலெக்டர் அலுவலகத்தில் காணொலி காட்சி மூலம் சேலம் பெண் விவசாயியிடம் மோடி கலந்துரையாடல்
x
தினத்தந்தி 2 Jan 2022 2:43 AM IST (Updated: 2 Jan 2022 2:43 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காணொலி காட்சி மூலம் பெண் விவசாயியிடம் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காணொலி காட்சி மூலம் பெண் விவசாயியிடம் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
மோடி கலந்துரையாடல்
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிரதமர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் 10-வது தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்குதல் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான பங்கு மானியம் வழங்கும் நிகழ்ச்சி புதுடெல்லியில் நேற்று நடந்தது. இதையொட்டி விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை சேர்ந்தவர்களிடம் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி, சேலம் மாவட்டம் வீரபாண்டியில் பெண்களால் நடத்தப்பட்டு வரும் வீரபாண்டி களஞ்சிய ஜீவித உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான சாந்தியுடன் நேற்று பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் இணை செயலாளர் ஷோமிதா பிஸ்வாஸ், மாவட்ட கலெக்டர் கார்மேகம் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் 5 இயக்குனர்கள், 30 விவசாயிகள் கலந்து கொண்டனர்.
பெண் விவசாயிக்கு பாராட்டு
வீரபாண்டி களஞ்சிய ஜீவித உழவர் உற்பத்தியாளர் நிறுவனமானது, தமிழக அரசின் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, நபார்டு வங்கி ஆகியவற்றின் மூலம் எண்ணெய் வித்துகளில் இருந்து எண்ணெய் பிழிதல், மாவு தயாரிப்பு ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் கடந்த நிதியாண்டில் ரூ.18 கோடியே 28 லட்சத்துக்கு வர்த்தகம் செய்துள்ளது. இதற்காக அதன் இயக்குனரான விவசாயி சாந்தி மற்றும் அவரது குழுவில் உள்ள பெண் விவசாயிகள் மற்றும் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். 
அப்போது, பெண் விவசாயி சாந்தியை பாராட்டிய பிரதமர் மோடி, அவரை முன்னுதாரணமாக கொண்டு மற்ற பெண்கள் செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். மேலும் விவசாயி சாந்தி முன்னதாக பிரதமர் மோடிக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். அதற்கு மோடி, பதிலுக்கு சாந்திக்கு புத்தாண்டு வாழ்த்து கூறினார்.

Next Story