ஆங்கில புத்தாண்டையொட்டி சேலம் கோவில்களில் சிறப்பு பூஜை-திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


ஆங்கில புத்தாண்டையொட்டி சேலம் கோவில்களில் சிறப்பு பூஜை-திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 2 Jan 2022 2:48 AM IST (Updated: 2 Jan 2022 2:48 AM IST)
t-max-icont-min-icon

ஆங்கில புத்தாண்டையொட்டி சேலம் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

சேலம்:
ஆங்கில புத்தாண்டையொட்டி சேலம் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ராஜகணபதி கோவில்
2022 புத்தாண்டு தினம் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. புதியதாக பிறந்த புத்தாண்டு வளமான ஆண்டாகவும், நோய் நொடியின்றி மகிழ்ச்சியான ஆண்டாகவும் அமைய வேண்டி திரளான பக்தர்கள் கோவிலுக்கு சென்று வழிபட்டனர். அதேசமயம், கொரோனா மற்றும் ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதனால் கொரோனா கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடன் சாமிதரிசனம் செய்தனர்.
அந்த வகையில் சேலம் டவுன் ராஜகணபதி கோவிலில் நேற்று அதிகாலை சாமிக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து ராஜகணபதிக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமியை தரிசனம் செய்து வழிபட்டனர்.
கோட்டை மாரியம்மன் கோவில்
சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். சேலம் கோட்டை பெருமாள் என்று அழைக்கப்படும் அழகிரிநாத சாமி கோவிலில் மூலவர் பெருமாள், தாயார், ஆண்டாள், கருடாழ்வார் சாமிகளுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. அதேபோல் ஆஞ்சநேயருக்கு தங்ககவசம் அணிவித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் சாமி தரிசனம் செய்தனர்.
காவடி பழனியாண்டவர் ஆசிரமம் 
சேலம் குமாரசாமிபட்டியில் உள்ள எல்லைப்பிடாரி அம்மன் கோவிலில் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. அம்மனுக்கு தங்க கவசம் மற்றும் வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அஸ்தம்பட்டியில் உள்ள மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜை நடந்தது.
சேலம் ஜாகீர் அம்மாபாளையம் காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் புத்தாண்டு பிறப்பையொட்டி நேற்று சாமிக்கு 64 திரவியங்களால் அபிஷேகம் செய்து, தங்க கவசம் அணிவித்து பூஜைகள் நடந்தன. இதைத்தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் முன்னிலையில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. பிறகு ஐஸ்வர்யேவரர் பூஜையும், மாலையில் தங்கரதம் புறப்பாடு நிகழ்ச்சியும் நடந்தது. இதே போல சேலம் ஜாகீர்அம்மாபாளையம் வனகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு வெள்ளி கிரீடம் அணிவித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
சேலம் பெரமனூரில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில் புத்தாண்டையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பெருமாளுக்கு பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 
வெங்கடேச பெருமாள் கோவில்
இதேபோல், சுகவனேசுவரர் கோவில், நெத்திமேடு தண்ணீர் பந்தல் காளியம்மன் கோவில், பேர்லேண்ட்ஸ் முருகன் கோவில், ஊத்துமலை முருகன் கோவில், குமரகிரி தண்டாயுதபாணி சுவாமி கோவில், அம்மாபேட்டை செங்குந்தர் பாலசுப்பிரமணியசாமி கோவில், பாண்டுரெங்கநாதர் கோவில், பட்டைக்கோவில், நெடுஞ்சாலை நகர் வரசித்தி விநாயகர் கோவில், சேலம் ராஜாராம் நகர் தேவராஜ கணபதி கோவில், சின்னதிருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில், வெண்ணங்குடி முனியப்பன் கோவில், செவ்வாய்பேட்டை பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் உள்பட சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து கோவில்களிலும் புத்தாண்டையொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Next Story