வீரவநல்லூரில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 2-வது நாளாக போராட்டம்
உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 2-வது நாளாக போராட்டம்
சேரன்மாதேவி:
வீரவநல்லூரில் மின்சாரம் தாக்கி பலியான தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிலாளி பலி
வீரவநல்லூர் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் சைலப்பன் (வயது 45). விவசாய கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் காலையில் அங்குள்ள மருதகுளத்துக்கு சென்றபோது, அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியில் மிதித்ததால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இறந்த சைலப்பனின் உடல் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
போராட்டம்
இதற்கிடையே மின்வாரியத்தினரின் அலட்சியத்தால் சைலப்பன் இறந்ததாக கூறி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சைலப்பனின் குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
நேற்று 2-வது நாளாக சைலப்பனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. வீரவநல்லூருக்கு சென்று சைலப்பனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். மேலும் சைலப்பனின் 3 மகள்களின் கல்வி செலவையும் ஏற்பதாக தெரிவித்தார்.
நிதி உதவி
சைலப்பனின் குடும்பத்தினருக்கு தமிழக மின்சார வாரியம் சார்பில் ரூ.5 லட்சம் நிதி உதவியும், வருவாய்த்துறை சார்பில் சைலப்பனின் மனைவி ராஜம்மாளுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான ஆணையும் வழங்கப்பட்டது. மேலும் முதல்-அமைச்சரின் நிவாரண உதவி வழங்க பரிந்துரைப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றும் வரையிலும், சைலப்பனின் உடலை பெற்று கொள்ள மாட்டோம் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.
.............
Related Tags :
Next Story