புகார் பெட்டி
புகார் பெட்டி
மின்கம்பம் மாற்றப்படுமா?
அந்தியூர் வனத்துறை அலுவலகம் எதிரே மின்கம்பம் உள்ளது. இதிலுள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பி மட்டுமே வெளியே தெரிகின்றன. பலத்த காற்று அடித்தால் மின்கம்பம் கீழே விழும் வாய்ப்பு உள்ளது. எனவே மின்கம்பத்தை மாற்றி கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பூபதி, அந்தியூர்
நாய்கள் தொல்லை
மாணிக்கம்பாளையம் பள்ளிக்கூட மைதானம் அருகில் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டு தேங்கி உள்ளன. அதேபோல் தெருநாய்களின் தொல்லையும் அதிகரித்து வருகிறது. தெருவில் நடந்து செல்பவர்களை கடித்து குதறி விடுகிறது. இதனால் அந்த வழியாக செல்ல பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். நாய்கள் குப்பைகளை கிளறிவிடுவதால் ஆங்காங்கே சிதறியபடி கிடந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் பரவ வாய்ப்பு உள்ளது. உடனே குப்பைகளை அள்ளவும், தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், மாணிக்கம்பாளையம்.
ஆபத்தான குழி
ஈரோடு மணிக்கூண்டு அருகே அய்யனாரப்பன் கோவில் வீதி-1-ல் உள்ள குடிநீர் குழாயில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் வீணாக வெளியேறியது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் குழி தோண்டி உடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் குழியை மூடாமல் அப்படியே விட்டுவிட்டனர். இதனால் சிறுவர்-சிறுமிகள் குழிக்குள் விழுந்து விட வாய்ப்பு உள்ளது. மேலும் குழாயில் இருந்து தண்ணீரும் கசிந்து வருகிறது. உடனே குழாய் உடைப்பை அதிகாரிகள் சரிசெய்து குழியையும் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சந்தோஷ்குமார், அய்யனாரப்பன் கோவில் வீதி, ஈரோடு.
கூடுதல் கழிப்பிடங்கள் வேண்டும்
பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் விளையாட்டு மைதானம் அருகே 2 கழிப்பறைகள் கட்டப்பட்டன. தற்போது அந்த கழிப்பறைகளையே 1,000 மாணவர்களும் பயன்படுத்தி வருகிறார்கள். அது போதுமானதாக இல்லை. ஏற்கனவே இருக்கும் பழைய கழிப்பறைகள் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. எனவே கூடுதலாக கழிப்பறைகள் கட்டி கொடுக்கவும், பழைய கழிப்பறைகளுக்கு தண்ணீர் வசதி செய்துகொடுக்கவோ அல்லது இடிக்கவோ வேண்டும்.
பொதுமக்கள், பவானி.
வேகத்தடை வேண்டும்
ஈரோடு ஈ.பி.பி. நகர் மாரியம்மன் கோவில் தெருவில் 4 ரோடு சந்திப்பு உள்ளது. இந்த ரோட்டில் வேகத்தடை இல்லை. இதனால் அந்த வழியாக வேகமாக வரும் இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் ஒன்றோடொன்று அடிக்கடி மோதிக் கொள்கின்றன. இதனால் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். விபத்துகளைத் தடுக்க உடனே வேகத்தடை அமைக்க வேண்டும்.
பாலு, ஈ.பி.பி.நகர், ஈரோடு.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் புதுப்பாளையத்தில் ரோட்டோரம் குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளது. அதன் அருகே உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிலிருந்து கழிவுநீர் வெளியேறி குப்பைக்கு செல்கிறது. இதனால் துர்நாற்றம் வீசி வருகிறது. நோய் பரவ வாய்ப்பு உள்ளது. உடனே ரோட்டோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றவும், சாக்கடை கழிவுநீர் அடைப்பை சரிசெய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஆ.புதுப்பாளையம்
குண்டும்-குழியுமான ரோடு
ஈரோடு ரங்கம்பாளையம் அன்னை இந்திரா நகரில் சூரம்பட்டி சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு செல்லும் ரோடு குண்டும்-குழியுமாக காணப்படுகிறது. மழைநீரும் தேங்கி வருகிறது. இதனால் அந்த வழியாக அரசு அலுவலகங்களுக்கும், பள்ளிக்கூடத்துக்கும் வரும் மாணவ-மாணவிகள் நடந்து செல்ல சிரமப்படுகிறார்கள். உடனே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ரங்கம்பாளையம்.
Related Tags :
Next Story