தியேட்டர்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர ஏற்பாடு
ஒமைக்ரான் பரவலால் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் தியேட்டர்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடலூர்,
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவல் குறைய தொடங்கிய நிலையில், தற்போது ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமெடுத்துள்ளது. இதனால் அரசு ஊரடங்கில் மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
மேலும் கேளிக்கை விடுதிகளில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுக்கள், உணவகங்கள் ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். தியேட்டர்கள் உள்ளிட்ட அனைத்து அரங்கங்களிலும் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50 சதவீதம் பார்வையாளர்களுடன் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்தது. இந்த கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன.
60 தியேட்டர்கள்
இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள 60 சினிமா தியேட்டர்களிலும் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து படம் பார்ப்பதற்கு வசதியாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதாவது வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து அமரும் வகையில் ஒவ்வொரு இருக்கைக்கும் இடையே ரிப்பன் மூலம் கட்டப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து தியேட்டர்களிலும் கிருமி நாசினி தெளித்தல், தூய்மையாக வைத்திருத்தல் போன்ற தூய்மை பணிகள் நடந்து வருகிறது. இதுதவிர தியேட்டர்களுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல்வெப்ப நிலை பரிசோதிக்கப்படுவதோடு, சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story