மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் கடற்கரை கோவிலுக்கு செல்ல தடையால் ஏமாற்றம்
புத்தாண்டை முன்னிட்டு மாமல்லபுரத்தில் குடும்பம், குடும்பமாக சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கடற்கரை கோவிலுக்கு தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர்.
சுற்றுலா பயணிகள்
ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் விதமாக மாமல்லபுரத்தில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கொரோனா விதிமுறைகளை பின்பற்றி வெண்ணை உருண்டை கல், அர்ச்சுனன் தபசு, ஐந்துரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை மட்டும் கண்டுகளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
கடற்கரை கோவில் பகுதிக்கு சென்று சுற்றிப்பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் கடலில் குளித்து மகிழும் ஆவலில் வந்த பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கடற்கரைக்கு செல்லும் நுழைவு வாயில் பகுதியில் தடுப்புகள் அமைத்து இருந்தனர். அதையும் மீறி கடற்கரைக்கு செல்ல முயன்றவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.
கூட்டம் களை கட்டியது
பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு என தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் நேற்று திரண்ட பொதுமக்கள் கூட்டத்தால் அனைத்து புராதன சின்னங்களிலும் கூட்டம் களைகட்டயது. இதனால் சாலையோர வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோவளம் சாலை மற்றும் கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மெதுவாக ஊர்ந்து சென்றன. போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story