பனிப்பொழிவால் இளநீர் விலை சரிவு


பனிப்பொழிவால் இளநீர் விலை சரிவு
x
தினத்தந்தி 2 Jan 2022 4:35 PM IST (Updated: 2 Jan 2022 4:35 PM IST)
t-max-icont-min-icon

பனிப்பொழிவால் இளநீர் விலை சரிவு

முத்தூரில் பனிப்பொழிவால் இளநீர் விற்பனையும், விலையும் சரிந்து உள்ளது.
பனிப்பொழிவால் ஈரப்பதம்
திருப்பூர் மாவட்டம் முத்தூர் நகர, சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் பருவகால சீதோஷண நிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக கடந்த 2 வார காலமாக பகல் நேரங்களில் மிதமான வெயில் அடித்து வருகிறது. மேலும் இப்பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக சாரல். மிதமான, பலத்த மழை பெய்தது. மேலும் கடந்த 15 நாட்களாக தினந்தோறும் மாலை 6 மணிக்கு மேல் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இந்த பனிப்பொழிவு முதல் நாள் இரவு தொடங்கி மறுநாள் காலை 8 மணி வரை கடும் ஈரப்பதத்துடன் இருந்து வருகிறது. மேலும் ஒரு சில நாட்களில் அதிகாலை நேரத்தில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு சாரல் மழை போல் பெய்து வருகிறது. மேலும் இப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் பனிப்பொழிவு காரணமாக அதிகாலையில் நடைபயிற்சி செய்பவர்கள். அதிகாலையில் அரசு அலுவலகங்கள், பனியன் நிறுவனங்கள். தோட்ட வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், பனியன் நிறுவன தொழிலாளர்கள் கடும் குளிரினால் மிகுந்த சிரமம் அடைந்து உள்ளனர்.
இளநீர் விலை சரிவு
இந்த நிலையில் இப்பகுதிகளில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவால் இளநீர் விலையும், விற்பனையும் சரிந்து உள்ளது. இதுபற்றி இளநீர் வியாபாரி ராமசாமி என்பவர் கூறியதாவது:
இப்பகுதிகளில் பொதுவாக ஆண்டு முழுவதும் பகல் நேரங்களில் இளநீர் விற்பனை இருந்து கொண்டே இருக்கும். இதில் கோடை காலமான ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இளநீர் விற்பனை நன்கு சூடு பிடித்து விறுவிறுப்பாக விற்பனை ஆகும். இதன்படி கோடைகாலத்தில் சுமார் 5 மாதங்களுக்கு மேல் ஒரு இளநீரின் விலை ரூ 60 வரை உயர்த்தி விற்பனை செய்யப்படும். இந்த நிலையில் இப்பகுதிகளில் கடந்த 2 வார காலமாக பெய்து வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக இளநீர் விற்பனை வெகுவாக சரிந்து உள்ளது. அதாவது ஒரு சாதாரண இளநீர் ரூ.30க்கும், செவ்விளநீர் ரூ.40-க்கும் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடும் பனிப்பொழிவால் இப்பகுதிகளில் தற்போது இளநீர் விலையை குறைத்து விற்பனை செய்தாலும் இளநீர் விற்பனை மந்தமாகவே உள்ளது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதிகளில் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக விவசாயிகளின் ஏராளமான தென்னை மரங்கள் காய்ந்து விட்டன. இதில் உயிர் பிழைத்தும், புதிய தென்னை மரங்களில் இருந்தும் தற்போது இளநீர் வெட்டி கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தேங்காய் பருப்பு விலை உயர்வு
மேலும் இப்பகுதிகளில் கடந்த 6 மாத காலமாக தேங்காய், தேங்காய் பருப்பு விலை அதிக அளவு உயர்ந்து உள்ளது. அதாவது அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மற்றும் வெளி வியாபார இடங்களில் நல்ல தரமான ஒரு கிலோ தேங்காய் ரூ.25ஐ தாண்டியும், தேங்காய் பருப்பு ஒரு கிலோ ரூ.90 ஐ தாண்டியும் விற்பனையாகி வருகிறது. ஆனால் அதே கால கட்டமான தற்போதைய சூழ்நிலையில் பனிப்பொழிவால் இளநீர் விலையும், விற்பனையும் கடுமையாக சரிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இவ்வாறு அவர் கூறினார்.

Next Story