பெண் டாக்டரிடம் வசூலித்து பாதிக்கப்பட்டவரிடம் ஒப்படைக்க உத்தரவு


பெண் டாக்டரிடம் வசூலித்து பாதிக்கப்பட்டவரிடம் ஒப்படைக்க  உத்தரவு
x
தினத்தந்தி 2 Jan 2022 5:52 PM IST (Updated: 2 Jan 2022 5:52 PM IST)
t-max-icont-min-icon

பெண் டாக்டரிடம் வசூலித்து பாதிக்கப்பட்டவரிடம் ஒப்படைக்க உத்தரவு

திருப்பூர், ஜன.3-
உடுமலையில் கர்ப்பிணிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வசூலித்த ரூ.37 ஆயிரத்தை சம்பந்தப்பட்ட அரசு பெண் டாக்டரிடம் இருந்து பெற்று, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் ஒப்படைக்க கலெக்டர் உத்தரவிட்டார். ஆனால் அந்த பணத்தை சம்பந்தப்பட்ட தொழிலாளி வாங்க மறுத்து திருப்பி அனுப்பிவிட்டார்.
அரசு டாக்டர் அலட்சியம்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா காரத்தொழுவை சேர்ந்தவர் மருதமுத்து  தேங்காய் வெட்டும் தொழிலாளி. இவருடைய மனைவி ராஜராஜேஸ்வரி இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளான்.
இந்தநிலையில் ராஜேஸ்வரி மீண்டும் கர்ப்பமானார். கணியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 23 ந் தேதி ராஜராஜேஸ்வரிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அப்போது அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்த்த போது வயிற்றில் உள்ள சிசு உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். உடனடியாக உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு பணியில் இருந்த டாக்டர் ஜோதிமணி சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக இருந்ததாக மருதமுத்து குற்றம் சாட்டினார்.
கலெக்டரிடம் புகார்
இதைத்தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் மருதமுத்து ரூ.37 ஆயிரம் செலுத்தினார். பின்னர் அறுவை சிகிச்சை மூலம் உயிரிழந்த சிசு வெளியே எடுக்கப்பட்டது. ஆனால் இந்த அறுவை சிகிச்சை மேற்கொண்டவர் அரசு மருத்துவமனை டாக்டர் ஜோதிமணி ஆவார். இதனால் மருதமுத்து அதிர்ச்சி அடைந்தார்.
சம்பவம் தொடர்பாகவும், உடுமலை அரசு மருத்துவமனையின் அவலம் குறித்தும் மருதமுத்து, திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவித்தார். இதுதொடர்பாக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் மற்றும் உடுமலை ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த கலெக்டர் வினீத் உத்தரவிட்டார்.
ரூ.37 ஆயிரம் வழங்க உத்தரவு
அந்த அறிக்கையின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மருதமுத்து தம்பதிக்கு ரூ.37 ஆயிரம் தனியார் மருத்துவமனையில் வசூலிக்கப்பட்ட ரூ.37 ஆயிரத்தை அரசு டாக்டர் ஜோதிமணி திருப்பி ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைக்காத பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் உத்தரவிட்டார்.
முன்னதாக இந்த புகார் சம்பவம் எழுந்து போது பெண் டாக்டர் ஜோதிமணி கூடலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இதை தொடர்ந்து டாக்டர் ஜோதிமணி ரூ.37 ஆயிரத்தை வருவாய் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். 
பணத்தை வாங்க மறுத்த தொழிலாளி
மடத்துக்குளம் தாசில்தார் சம்பந்தப்பட்ட மருதமுத்துவிடம் ரூ.37 ஆயிரத்துக்கான காசோலையை ஒப்படைக்க சென்றபோது அவர் அந்த பணத்தை வாங்க மறுத்துவிட்டார்.
இதுகுறித்து மடத்துக்குளம் தாசில்தார் ஜலஜா கூறும்போது அரசு டாக்டர் அளித்த ரூ.37 ஆயிரத்துக்கான காசோலையை மருதமுத்துவிடம் கிராம நிர்வாக அதிகாரி மூலமாக இரண்டு முறை ஒப்படைக்க சென்ற போதும் அவர் அதை வாங்க மறுத்து திருப்பி அனுப்பிவிட்டார் என்றார்.

Next Story