ஆண்டிப்பட்டி அருகே போலீசாரை கண்டித்து கிராமமக்கள் மறியல் மணல் அள்ளிய டிராக்டர்கள் பறிமுதல்
ஆண்டிப்பட்டி அருகே போலீசாரை கண்டித்து கிராமமக்கள் மறியல் செய்தனர். பின்னர் மணல் அள்ளிய டிராக்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆண்டிப்பட்டி :
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள பாலக்கோம்பை பகுதியில் ராஜதானி போலீசார் நேற்று அதிகாலையில் ரோந்து சென்றனர்.
அப்போது பாலக்கோம்பை ஓடையில் 2 டிராக்டர்களில் சிலர் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் சுற்றிவளைத்து மணல் அள்ள பயன்படுத்திய டிராக்டர்களை பறிமுதல் செய்ய முயன்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் அங்கு திரண்டு வந்து டிராக்டர்களை பறிமுதல் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பாலக்கோம்பை ஓடையில் எங்கள் கிராமத்தின் தேவைக்காக மட்டுமே மணல் எடுப்பதாக கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சாலைமறியல்
பின்னர் கிராமமக்கள் ஏராளமானவர்கள் பாலக்கோம்பை சாலையில் போலீசாரின் நடவடிக்கைக்கு எதிராக மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து பாலக்கோம்பை கிராமத்தில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் தேனி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், ஆண்டிப்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு தங்ககிருஷ்ணன் ஆகியோர் விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மணல் அள்ள பயன்படுத்திய டிராக்டர்களை கிராம மக்கள் போலீசாரிடம் ஒப்படைக்க மறுத்தனர். இவ்வாறு தொடர்ந்து போராட்டம் நடைபெற்றதால் போலீசார் பொறுமையிழந்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
பின்னர் போலீசார் கிராமமக்களிடம், மறியலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று எச்சரித்தனர். இதைத்தொடர்ந்து கிராமமக்கள் மணல் அள்ள பயன்படுத்திய டிராக்டர்களை போலீசாரிடம் ஒப்படைத்து விட்டு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
ஓடையில் மணல் அள்ளுவதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடந்த இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக டிராக்டர் உரிமையாளர்கள் 2 பேர் மீது ராஜதானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story