கூடலூர் அருகே தென்னந்தோப்புக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்
கூடலூர் அருகே தென்னந்தோப்புக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்தன.
கூடலூர்:
கூடலூர் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தையொட்டி அமைந்து உள்ளது. இதனால் மான், யானை, கரடி, காட்டுப்பன்றி, குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. எனவே விவசாயிகள் இரவு நேர காவலுக்கு சென்று உரக்க சத்தம் எழுப்பியும், தகரங்களை தட்டி ஒலி எழுப்பியும் வன விலங்குகளை விரட்டியடித்து வருகின்றனர்.
கூடலூர் அருகே உள்ள வெட்டுக்காடு கடமான்குளம் பகுதியில் கூடலூரை சேர்ந்த சேது என்பவரது தென்னந்தோப்பு உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு 10-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் புகுந்து அட்டகாசம் செய்தன. அங்கிருந்த 80-க்கும் மேற்பட்ட தென்னைமரங்களை யானைகள் வேருடன் சாய்த்து சேதப்படுத்தின. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கூடலூர் வனச்சரகர் அருண்குமார், வனவர் சிவலிங்கம் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து காட்டு யானைகளால் சேதம் அடைந்த பகுதிகளை பார்வையிட்டனர். இதனிடையே விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், யானைகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கிராமமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story