தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 2 Jan 2022 7:42 PM IST (Updated: 2 Jan 2022 7:42 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சாலை சரிசெய்யப்படுமா? 

நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட நெல்லை-தூத்துக்குடி மெயின் ரோட்டில் கே.டி.சி.நகர் உள்ளது. இந்த கே.டி.சி. நகர்-சீவலப்பேரி ரோட்டை இணைப்பது மங்கம்மாள் சாலை ஆகும். இந்த சாலையில் சுமார் 1 கிலோ மீட்டர் வரை நெல்லை மாநகராட்சிக்கும், மீதம் உள்ள பகுதி கீழநத்தம் பஞ்சாயத்துக்கும் உட்பட்டது ஆகும். இதில் நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக மழைநீர் தேங்கி காணப்படுகிறது.  இதனால் அடிக்கடி அங்கு விபத்துகள் ஏற்படுகிறது. உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு இந்த சாலையை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பார்களா? 
அண்ணாதுரை, கே.டி.சி. நகர். 

எரியாத மின்விளக்குகள் 

நெல்லை சீவலப்பேரி மெயின் ரோட்டில் இருந்து கிருபாநகருக்கு செல்லும் சாலையில் மின்விளக்குகள் எரியாமல் உள்ளது. இரவு நேரங்களில் வேலைக்கு சென்று வீடு திரும்பும் பெண்கள் உள்ளிட்டவர்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். மேலும் மழை நேரங்களில் விஷ ஜந்துக்கள் அதிக அளவில் இருப்பதால் மக்கள் இரவு நேரங்களில் அந்த சாலையில் செல்ல பயப்படுகிறார்கள். எனவே அந்த சாலையில் உள்ள மின்விளக்குகள் எரிவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். 
இசக்கியம்மாள், கிருபாநகர். 

பயணிகளை குழப்பும் வழிகாட்டி பலகை

ராதாபுரம் தாலுகா இருக்கன்துறை பஞ்சாயத்து நக்கனேரியில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகையில் அஞ்சு கிராமத்திற்கு 16 கிலோ மீட்டர் என்றும், அதனை அடுத்த ஊரல்வாய்மொழி விலக்கில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகையில் அஞ்சு கிராமத்திற்கு 18 கிலோமீட்டர் என்றும் தவறுதலாக உள்ளது. இது அந்த வழியே செல்லும் வெளியூர் பயணிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சரிசெய்ய வேண்டுகிறேன்.
ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

தெருவில் தேங்கும் கழிவுநீர்

நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பேட்டை 45-வது வார்டு சுந்தர விநாயகர் கோவில் படையாச்சி தெருவில் கழிவுநீர் வடிகால் நிரம்பி கிடக்கிறது. இதனால் தெருவில் கழிவுநீர் தேங்குவதால் மக்கள் நடமாட சிரமமாக உள்ளது. மேலும் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிேறன்.
விஷ்ணு, பேட்டை.

வேகத்தடை வேண்டும் 

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகா ஊத்துமலை அரசு ஆஸ்பத்திரி சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் அமைந்து உள்ளது. இந்த சாலையில் வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்துகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் ஆஸ்பத்திரிக்கு சென்று வருபவர்கள் அச்சப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த சாலையில் ஆஸ்பத்திரி முன்பு வேகத்தடை அமைக்க வேண்டுகிறேன். 
முத்துபாண்டியன், ஊத்துமலை.

நீர்நிலைகளில் கொட்டப்படும் பொருட்கள் 

வீரகேரளம்புதூரில் இருந்து அதிசயபுரம் செல்லும் சாலையில் ஒரு ஓடை உள்ளது. இந்த ஓடையில் சிறுவர்கள், பொதுமக்கள் குளித்து செல்வது வழக்கம். கடந்த சில நாட்களாக காலாவதியான தின்பண்டங்கள் ஓடை பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது. இதனை நீர்நிலைகளுக்கு குளிக்க வரும் சிறுவர், சிறுமிகள் எடுத்து சாப்பிட வாய்ப்புகள் உள்ளன. எனவே இதனை தடுக்க நீர்நிலைகளில் இதுபோன்ற பொருட்கள் கொட்டப்படுவது தடுக்கப்பட வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் குப்பை தொட்டிகள் அமைக்க வேண்டும்.
ஜெயக்குமார். ராஜகோபாலபேரி.

வர்ணம் பூசப்படாத வேகத்தடை 

கடையத்தில் இருந்து அம்பை செல்லும் நெடுஞ்சாலையில் திருமலையப்பபுரம் பள்ளிக்கூடம் அருகிலும், பொட்டல்புதூர் பள்ளிக்கூடம் அருகிலும் வேகத்தடை உள்ளது. அந்த வேகத்தடையின் மீது வர்ணம் பூசப்படவில்லை. இதனால், அந்த பகுதியில் வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். குறிப்பாக, இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அடிக்கடி நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.எனவே, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி அந்த வேகத்தடையின் மீது வர்ணம் பூசுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன். 
திருக்குமரன், கடையம்.

ஸ்ரீவைகுண்டத்தில் ரெயில் நின்று செல்லுமா?   

கொரோனாவிற்கு முன்பு திருச்செந்தூர்-பாலக்காடு ரெயில் சாதாரண ரெயிலாக இயக்கப்பட்டது. அப்போது அந்த ரெயில் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் நின்று சென்றது. ஆனால் தற்போது அந்த ரெயில் விரைவு வண்டி என அறிவித்து ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் நிற்காமல் செல்கிறது. இதனால் வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள் உள்ள ஸ்ரீவைகுண்டத்துக்கு வந்து செல்லும் பக்தர்கள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே பக்தர்கள், பொதுமக்கள், வியாபாரிகள் என அனைவரும் பயன்பெறும் வகையில் திருச்செந்தூர்-பாலக்காடு விரைவு ரெயில் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 சித்திரைவேல், ஸ்ரீவைகுண்டம்.

Next Story