விசுவரூப சுந்தர வரத ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா


விசுவரூப சுந்தர வரத ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
x
தினத்தந்தி 2 Jan 2022 8:06 PM IST (Updated: 2 Jan 2022 8:06 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே தெய்வச்செயல்புரத்தில் உள்ள விசுவரூப சுந்தர வரத ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே தெய்வச்செயல்புரத்தில் உள்ள விசுவரூப சுந்தர வரத ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது.

விசுவரூப ஆஞ்சநேயர்

தூத்துக்குடி-பாளையங்கோட்டை ரோட்டில் தெய்வச்செயல்புரத்தில் விசுவரூப சுந்தர வரத ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 77 அடி உயர விசுவரூப ஆஞ்சநேயர் கம்பீரமாக பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டு இருக்கிறார். இந்த ஆஞ்சநேயருக்கு தனிச்சிறப்பு உண்டு.

இலங்கையில் சீதையை ராவணனின் பிடியில் இருந்து மீட்பதற்காக படையெடுத்து சென்றார். அங்கு நடந்த போரின் போது, லட்சுமணன் மூர்ச்சையாகினார். இதனால் அவரை உயிர்ப்பிக்க வீர ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை தூக்கி வந்தார். அவர் மலையை தூக்கி வந்தபோது, மலையில் இருந்த சிறு சிறு கற்கள் 6 இடங்களில் விழுந்தன. அந்த இடங்களில் எல்லாம் ஆஞ்சநேயர் விசுவரூப தரிசனத்தில் காட்சி அளித்து வருவதாகவும், இந்த கற்கள் விழுந்த இடங்கள் சிறிய மலைக்குன்றாக காட்சி அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

6 கோவில்கள்

அதன்படி நாமக்கல், சுசீந்திரம் தாணுமலை, சென்னை பரங்கிமலை, திண்டுக்கல் சின்னாளம்பட்டி, தூத்துக்குடி தெய்வச்செயல்புரம், இலங்கை ஆகிய இடங்களில் இந்த 6 கோவில்கள் அமைந்து உள்ளன. இந்த கோவில்களில் மட்டுமே ஆஞ்சநேயர் விசுவரூபத்தில் காட்சி அளிக்கிறார். இந்த 6 இடங்களிலும் ஆஞ்சநேயர் மலையை நோக்கி நிற்பது போன்று சிலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. நவகைலாயம், நவதிருப்பதி போன்று இந்த 6 ஆஞ்சநேயர் கோவில்களும் அமைந்து உள்ளன.

6 கோவில்களிலும், தூத்துக்குடி அருகே தெய்வச்செயல்புரத்தில் அமைந்து உள்ள 77 அடி உயர ஆஞ்சநேயர் உயரமானவர் ஆவார். இவர் வல்லநாடு மலையை நோக்கி காட்சி அளித்து கொண்டு இருக்கிறார். இந்த ஆஞ்சநேயரை வழிபட்டால் திருமண தடை நீங்கும், கல்வி அபிவிருத்தி, செல்வம் பெருகும், சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அனுமன் ஜெயந்தி

இங்கு நேற்று அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று காலையில் பஞ்சசுத்த ஹோமம், சுதர்சனஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், ஆஞ்சநேயர் சிறப்பு பூஜைகள் நடந்தன. விசுவரூப ஆஞ்சநேயருக்கு துளசி மாலை, வடைமாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது.

கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு சந்தனகாப்பு, கனி அலங்காரம் உள்ளிட்ட அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. கோவிலில் நேற்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் அனுமனை வழிபட்டு சென்றனர். பக்தர்களுக்கு வடை உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டது.

கோவில்பட்டி

கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் புற்று கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. இதையொட்டி அனுமனுக்கு 18 வகையான அபிஷேகம், துளசி மாலை சாத்தி தீபாராதனை நடைபெற்றது.

துளசிங்க நகர் பூமாதேவி ஆலயத்தில் அனுமனுக்கு மஞ்சள் பொடி, திரவியம், பால், தேன் அபிஷேகம் நடந்தது. 
தொடர்ந்து சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கோவில்பட்டி நிறை உள்ளம் அய்யப்ப பக்தர்கள் குழு சார்பில் மந்தித்தோப்பு ரோடு, தங்க மஹாலில் அனுமன் ஜெயந்தி விழா மற்றும் கூட்டு கன்னி பூஜை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.

Next Story