பருவம் தவறி பெய்த மழையால் 1 லட்சம் ஏக்கர் மானாவாரி பயிர்கள் மகசூல் பாதிப்பு
பருவம் தவறி பெய்த மழையால் 1 லட்சம் ஏக்கர் மானாவாரி பயிர்கள் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
கோவில்பட்டி:
பருவம் தவறி பெய்த மழையால் 1 லட்சம் ஏக்கர் மானாவாரி பயிர்கள் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
மகசூல் பாதிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் ராபி பருவத்தில் கடந்த புரட்டாசி மாதம் அடுத்தடுத்து பயிரிட்ட உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம், சூரியகாந்தி, வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி போன்றவை பருவம் தவறி பெய்த கன மழையினால் மகசூல் பாதிக்கப்பட்டு விவசாயிகள் கட னில் அவதிப்படுவதாக கரிசல் பூமி விவசாய சங்கத் தலைவர் வரதராஜன் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டு ராபி பருவத்தில் மானாவாரி நிலங்களில் உளுந்து, பாசி, கம்பு, மக்காச் சோளம், சூரியகாந்தி, வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி போன்றவைகள் புரட்டாசி 2-ம் வாரம் முதல் ஒவ்வொரு பயிராக பயிரிட்டனர். பருவம் தவறிபெய்த கனமழையால் மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக பருவநிலை மாற்றம் ஏற்படுவதை முன்கூட்டியே கணிக்க முடியவில்லை.
அதிக மழை
முன்னோர்கள் விதைப்பு செய்து வந்த பட்டத்தை நோக்கியே நடப்பாண்டிலும் விதைப்பு செய்யப்பட்டது. இதனால் பயிர்கள் போதிய வளர்ச்சி இல்லாமல் போய்விட்டது. இந்தாண்டு பருவம் சரியாக அமையாததால் 3 முறை அழித்து விதைத்தனர். அதிக மழை காரணமாக போதிய அளவு கதிர்களில் மணி பிடிக்கவில்லை. தற்போது முதல் கட்டமாக உளுந்து, பாசிப்பயறு, வெங்காயம் அறுவடை காலமாகும்.
உளுந்து, பாசிப்பயறு கடந்த காலங்களில் ஏக்கருக்கு 4 குவிண்டால் முதல் 6 குவிண்டால் வரை மகசூல் கிடைத்தது. ஆனால் இந்தாண்டு ஏக்கருக்கு 1 குவிண்டால் மட்டுமே கிடைத்துள்ளது. ஏக்கருக்கு ரூ.12 ஆயிரம் செலவாகி உள்ளது. இதேபோல சின்ன வெங்காயம் ஒட்டன்சத்திரம், துறையூர், பெரம்பலூருக்கு அடுத்தபடியாக கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், குளத்தூர், புதூர் வட்டாரங்களில் சுமார் 1 லட்சம் ஏக்கர் வரை பயிரிடப்பட்டுள்ளது. வெங்காயம் ஊடுபயிராக ஏக்கருக்கு 100 கிலோ வரையிலும், தனித்து சுமார் 250 கிலோ வரையிலும் ஊன்றினர்.
நிவாரணம்
அதிக மழை காரணமாக வேர் அழுகல் ஏற்பட்டு, தொடர் மழையால் நிலங்களுக்கு சென்று விவசாய பணியை மேற்கொள்ள முடியாததாலும், நண்டுக்கால் நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டு முற்றிலும் சேதமடைந்து விட்டது.
ஓரிரு விவசாயிகளுக்கு ஊன்றிய எடை அளவே மகசூல் கிடைத்துள்ளது. பெரும்பாலான வெங்காயம் பயிரிட்ட நிலங்களில் அதை பறிக்க வேண்டியது இல்லை. வெங்காயம் ஊன்றி அதன் முதிர்வு காலம் வரை ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் செலவு ஏற்பட்டுள்ளது.
கடந்தாண்டு கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துவிட்டு, இதர பயிர்களுக்கு வழங்கி விட்டு வெங்காயம், மிளகாய் பயிரிட்ட சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயி களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. எனவே அரசு துரித நடவடிக்கை எடுத்து பழைய நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும். 2020-2021 -ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story