நீலகிரியில் 10 லட்சத்து 9 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி


நீலகிரியில் 10 லட்சத்து 9 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி
x
தினத்தந்தி 2 Jan 2022 8:52 PM IST (Updated: 2 Jan 2022 8:52 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரியில் 10 லட்சத்து 9 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

ஊட்டி

நீலகிரியில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம் மூலம் இதுவரை 10 லட்சத்து 9 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என்று கலெக்டர் தெரிவித்தார்.

சிறப்பு முகாம்

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப் படுத்தப்பட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக நேற்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதற்காக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் உள்பட 235 நிலையான தடுப்பூசி மையங்கள் மற்றும் 20 நடமாடும் முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தன. 

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். 

கலெக்டர் ஆய்வு

255 முகாம்களில் ஆயிரத்து 20 பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தும் பணி யில் ஈடுபட்டனர். மேலும் தடுப்பூசி செலுத்தாதவர்கைளை கண்டறிந்து செலுத்த அறிவுறுத்தப்பட்டது. கலெக்டர் எஸ்.பி. அம்ரித் ஊட்டி அருகே சூட்டிங் மட்டம், பைன்பாரஸ்ட் ஆகிய சுற்றுலா தலங்களில் நடந்த தடுப்பூசி முகாமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ரத்த அழுத்த பரிசோதனை செய்யப் பட்டதா என்பதை கேட்டறிந்து, தடுப்பூசி செலுத்தியவர்களை சிறிது நேரம் கண்காணித்த பின்னர் அனுப்ப வேண்டும் என்று செவிலியரிடம் அறிவுறுத்தினார்.

சுற்றுலா பயணிக்கு அபராதம்

தொடர்ந்து பைன்பாரஸ்ட் பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்று கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது முககவசம் அணியாமல் வந்த சுற்றுலா பயணி ஒருவருக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. 

இதுகுறித்து கலெக்டர் எஸ்.பி.அம்ரித் கூறும்போது, நீலகிரி மாவட்டத்தில் இதுவரை முதல் டோஸ் 5 லட்சத்து 17 ஆயிரத்து 897 பேர், 2-வது டோஸ் 4 லட்சத்து 91 ஆயிரத்து 769 பேருக்கு என மொத்தம் 10 லட்சத்து 9 ஆயிரத்து 666 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. அனைவரும் தடுப்பூசி செலுத்தி தொற்று இல்லாத நீலகிரியை உருவாக்க வேண்டும் என்றார்.
 
இந்த ஆய்வின்போது ஊட்டி ஆர்.டி.ஓ. துரைசாமி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராஹீம் ஷா மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story