பா.ஜனதா அனைத்து மதத்துக்கும் பொதுவான கட்சி-அண்ணாமலை பேட்டி
பா.ஜனதா அனைத்து மதத்துக்கும் பொதுவான கட்சி என்று அந்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
தூத்துக்குடி:
பா.ஜனதா அனைத்து மதத்துக்கும் பொதுவான கட்சி என்று அந்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
பேட்டி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பா.ஜனதா கட்சி சார்பில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நேற்று விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அவரை கட்சி நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பின்னர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ஜனதா கட்சி அனைத்து மதத்துக்கும் பொதுவானதாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தி.மு.க. செயல்பாடுகளை பார்க்கும்போது ஒரு மதத்துக்கு மட்டும் எதிராக செயல்படுகிறதோ? என தோன்றுகிறது.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தி.மு.க.வின் ‘பி' அணியாக மாறி விட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த குற்றச்சாட்டில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக அவ்வப்போது தி.மு.க.வை குறை கூறுவது போல் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் அறிக்கைகள் விடுகிறார். எனவே தி.மு.க. மீது காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறியுள்ள குற்றச்சாட்டை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
பாரபட்சம்
தமிழகத்துக்கு பிரதமர் இதற்கு முன்பும் பல திட்டங்களை தந்து உள்ளார். பிரதமர் மாறவில்லை. தி.மு.க.தான் மாறி இருக்கிறது. சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) கவுன்சில் கூட்டத்தில் நூல் மீதான வரியை 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்த முடிவு எடுக்கப்பட்டது. தமிழக பா.ஜனதா கட்சி சார்பில் 17 சங்க பிரதிநிதிகளை அழைத்து சென்று நிதி அமைச்சரை சந்தித்து வேண்டுகோள் விடுத்தோம். அதன்பேரில் அந்த வரி உயர்வு தற்போது நிறுத்தப்பட்டு உள்ளது.
மேலும் மூலப்பொருட்கள் இடையிலான விலை வித்தியாசங்கள் அடிப்படையிலேயே ஜி.எஸ்.டி. வரி உயர்த்தப்பட்டு உள்ளது. அந்த அடிப்படையில் தான் காலணி மீதான வரியும் உயர்த்தப்பட்டு உள்ளது. இது யாருக்கும் பாரபட்சம் இல்லாமல் எடுக்கப்பட்ட முடிவு. பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என ஒரு தி.மு.க. எம்.பி கூறுகிறார். தி.மு.க. நிதி அமைச்சர் ஜி.எஸ்.டி.க்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வர எதிர்ப்பு தெரிவிக்கிறார். எனவே இதைபற்றி அவர்களே பேசி, முடிவு செய்யட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story