பொள்ளாச்சியில் கொப்பரை விலை திடீர் வீழ்ச்சி
பொள்ளாச்சியில் கொப்பரை விலை திடீர் வீழ்ச்சி
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் கொப்பரை தேங்காய் விலை திடீரென வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் ரூ.100 கோடி தேங்காய் தேக்கம் அடைந்து உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளார்கள்.
திடீர் சரிவு
கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை, ஆனைமலை, மேட்டுப்பாளையம் உள்பட பல்வேறு இடங்களில் சுமார் 4 கோடி தென்னை மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் பறிக்கப்படும் தேங்காய்கள், இளநீர்கள் திருப்பூர், திண்டுக்கல், மதுரை, சிவகாசி, தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
இந்தநிலையில் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களாக அடிக்கடி மழை பெய்து வருவதால் கொப்பரை உற்பத்திக்கு தேவையான வெப்பம் கிடைக்கவில்லை. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொப்பரை உற்பத்தி களங்களில் உற்பத்தி நடைபெறவில்லை. இதனிடையே கடந்த சில நாட்களாக தேங்காய், கொப்பரை விலை திடீரென சரிந்து உள்ளதால் தென்னை விவசாயிகள் விலை உயர்ந்த பின்பு விற்பனை செய்யலாம் என நினைத்து மரங்களில் பறிக்கப்படும் தேங்காய்களை ஆங்காங்கே களங்கள் மற்றும் தோப்புகளில் குவித்து வருகின்றனர்.
ரூ.100 கோடி தேங்காய்கள்
இதுகுறித்து தென்னை விவசாயிகள் கூறியதாவது:- மழை, பனி காரணமாக இளநீர் விற்பனை மற்றும் கொப்பரை விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 22-ந்தேதி ரூ.102 ஆக வெளிமார்க்கெட்டில் இருந்த ஒரு கிலோ கொப்பரை தேங்காய் தற்போது ரூ.95 ஆக உள்ளது. இதேபோல், கடந்த 10 நாட்களுக்கு முன் ரூ.32 ஆயிரமாக இருந்த ஒரு டன் தேங்காய் தற்போது ரூ.28 ஆயிரமாக குறைந்துள்ளது. சராசரியாக ரூ.16 ஆக இருந்த ஒரு தேங்காய் தற்போது ரூ.12 ஆக குறைந்துள்ளது.
கடந்த சில வாரங்களாக மழை, பனிபொழிவு காரணமாக மாவட்டத்தில் கொப்பரை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக கொப்பரை உற்பத்தி களங்கள் தற்காலிகமாக முடங்கியுள்ளது. இதன்காணமாக தோப்புகளில் சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான தேங்காய்கள் குவிந்து கிடக்கிறது.
ஒரு லட்சம் பேர் வேலை இழப்பு
மழை காரணமாக மரத்தில் தேங்காய் பறிப்பவர்கள், தேங்காயை எடுத்து வாகனங்களில் ஏற்றுபவர்கள், டிரைவர்கள் தேங்காய்களை உடைத்து கொப்பரைக்காக காய போடுபவர்கள், உற்பத்தி செய்யப்பட்ட கொப்பரைகளை அள்ளி எடுத்து மூட்டைகளில் நிரப்புவர்கள், விற்பனைக்கு எடுத்து செல்பவர்கள் என நேரடியாகவும், மறைமுகமாகவும் மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் தற்காலிகமாக வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.
கொப்பரை, தேங்காய் விலை சரிவினால் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்னை விவசாயிகளை விலை வீழ்ச்சியில் இருந்து காப்பாற்ற தேங்காய் எண்ணெயில் கலப்படத்தை அரசு தடுக்க வேண்டும். தேங்காய் எண்ணெய் விற்பனையை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கொப்பரை கிலோவிற்கு குறைந்தபட்சம் ரூ.125 முதல் ரூ.130 வரை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story