குப்பை வாகன ஒப்பந்தத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை
கோவை மாநகராட்சியில் குப்பை வாகன ஒப்பந்தத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
கோவை
கோவை மாநகராட்சியில் குப்பை வாகன ஒப்பந்தத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
சாலை பணிகளுக்கு பூமி பூஜை
கோவை மாவட்டத்தில் நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.3.17 கோடி மதிப்பீட்டில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட போத்தனூர், சாரமேடு உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை அமைப்பதற்கான பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது. இதில் மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் கோவை மாவட்டத்தில் பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாத மற்றும் புதிதாக அமைக்கப்படாத சாலைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி, சாலைகள் அமைக்க ரூ.200 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.
மின்சார கட்டணம்
எங்களுடைய ஆட்சியில் மின்சார கட்டணத்திற்கு ஜி.எஸ்.டி. வசூலிப்பதைபோல ஓ.பன்னீர்செல்வம் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். ஆனால் 2018-ம் ஆண்டு முதலே மின் இணைப்பு பெற விண்ணப்ப கட்டணம் உள்ளிட்ட இதர கட்டணங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி வசூலிக்கப்பட்டது. விவசாயிகளுக்கான இலவச மின்சார இணைப்பில் மீட்டர் பொருத்தக்கூடிய பணிகள் கடந்த ஆட்சியில் 2016-ல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
கடந்த ஆட்சியில் 2 லட்சத்து 66 ஆயிரம் இணைப்புகளுக்கு மின் மீட்டர்கள் பொருத்தப்பட்டு உள்ளது. ஆனால் தற்போது தான் விவசாய மின் இணைப்புக்கு மீட்டர் பொருத்தப்படுவது போல ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டு உள்ளார். ஒரு அறிக்கை வெளியிடுவதற்கு முன்பு கடந்த காலங்களில் நடந்தது என்ன என்பதை தெரிந்துகொண்டு அறிக்கை வெளியிட வேண்டும்.
எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பதிவு செய்து காத்திருந்த 4 லட்சத்து 52 ஆயிரம் விவசாயிகளில், ஒரே ஆண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கான மின் இணைப்பை வழங்க கூடிய திட்டம் தொடங்கப்பட்டு, தற்போது நிறைவேற்றப்பட்டு வருகிறது.
நடவடிக்கை
இதேபோல் கடந்த ஆட்சியில் கோவை மாநகராட்சியில் குப்பைத்தொட்டி, குப்பை அள்ளும் வாகனங்கள் ஒப்பந்த அடிப்படையில் எடுக்கப்பட்டதில் நிறைய தவறுகள் நடைபெற்றுள்ளது. அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். முதல்-அமைச்சர் சட்டமன்ற தேர்தலின் போது கொடுத்த 505 வாக்குறுதிகளில் 200-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
7 மாத காலத்திற்குள் தமிழகத்தின் நிதி நிலையை சீர்படுத்தி, 2 கோடியே 2 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி, பெண்களுக்கு நகர பஸ்களில் கட்டணம் இல்லாமல் இலவச பயணம், நகைக்கடன் மற்றும் மகளிர் சுய உதவிக் குழு கடன்கள் தள்ளுபடி போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது அவருடன் தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள் நா.கார்த்திக், பையா கவுண்டர் என்ற கிருஷ்ணன் உள்பட பலர் இருந்தனர்.
Related Tags :
Next Story