மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டியில் ஈரோடு அணி சாம்பியன் பட்டத்தை வென்றது


மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டியில் ஈரோடு அணி சாம்பியன் பட்டத்தை வென்றது
x
தினத்தந்தி 2 Jan 2022 10:07 PM IST (Updated: 2 Jan 2022 10:07 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் நடந்த மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டியில் ஈரோடு அணி சாம்பியன் பட்டம் வென்றது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் நடந்த மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டியில் ஈரோடு அணி சாம்பியன் பட்டம் வென்றது.

ஈரோடு அணி சாம்பியன்

தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட கபடி கழகம் ஆகியவை இணைந்து 68-வது மாநில அளவிலான பெண்கள் கபடி சாப்பியன்ஷிப் போட்டியை திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடத்தியது. கடந்த 31-ந் தேதி தொடங்கி நேற்று வரை 3 நாட்கள் நடைபெற்றது. இதில் 35 மாவட்ட அணிகளை சேர்ந்த வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 

நேற்று காலை 8 அணிகளுக்கு இடையே கால் இறுதி போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றிப் பெற்ற திண்டுக்கல், நாமக்கல், ஈரோடு, கோவை அணிகளுக்கு இடையே அரை இறுதி போட்டிகள் நடத்தப்பட்டது. ஈரோடு மற்றும் கோவை அணிகள் இறுதி போட்டிக்கு தேர்வானது. இறுதியாக கோவை அணியும், ஈரோடு அணியும் மோதின. இந்த போட்டியில் 30 புள்ளிகள் பெற்று ஈரோடு அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. 26 புள்ளிகளுடன் கோவை அணி 2-வது இடத்தை பிடித்தது.

ரூ.15 ஆயிரம் பரிசு 

இதனைத் தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு  தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடி கழக பொதுச் செயலாளர் ஏ.சபியுல்லா தலைமை தாங்கினார். மாவட்ட கபடி கழக தலைவர் வி.பவன்குமார் முன்னிலை வகித்தார். செயலாளர் ஆனந்தன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சி.என்.அண்ணாதுரை எம்.பி. கலந்துகொண்டு ஈரோடு அணிக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்களுடன் ரூ.15 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கினார்.

2-வது இடம் பிடித்த கோவை அணிக்கு கோப்பையும், ரூ.10ஆயிரம் ரொக்கப் பரிசும், 3-வது இடம் பிடித்த திண்டுக்கல் மற்றும் நாமக்கல் அணிகளுக்கு தலா ரூ.7,500 ரொக்கப் பரிசும், கோப்பையும் வழங்கி பாராட்டினார். இதில் திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்க செயலாளர் கே.புகழேந்தி, வேங்கிக்கால் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தமிழ்செல்வன், அரசு அலுவலர்கள் உள்பட கபடி கழக நிர்வாகிகள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். முடிவில் திருவண்ணாமலை மாவட்ட கபடி கழக இணை செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

Next Story