திருவண்ணாமலை மாவட்டத்தில் 7,73,859 குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு


திருவண்ணாமலை மாவட்டத்தில் 7,73,859 குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு
x
தினத்தந்தி 2 Jan 2022 10:07 PM IST (Updated: 2 Jan 2022 10:07 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் 7,73,859 குடும்ப அட்டைதாரர்களுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட இருப்பதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் 7,73,859 குடும்ப அட்டைதாரர்களுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட இருப்பதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

7,73,859 குடும்ப அட்டைதாரர்களுக்கு

பொங்கல் பண்டிகையையொட்டி பொது வினியோக திட்டத்தின் கீழ் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாமில் தங்கியுள்ள இலங்கை தமிழர் குடும்பங்கள் என 7 லட்சத்து 73 ஆயிரத்து 859 அட்டைதாரர்களுக்கு அந்தந்த ரேஸன் கடைகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வினியோகம் தொடங்குகிறது.

ரேஷன் கடைகளில் சுழற்சி முறையில் பெற ஏதுவாக நாள் ஒன்றுக்கு 200 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் வழங்குவதற்கு, பொருட்கள் வழங்கும் நாள், நேரம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு டோக்கன்கள் வீடுதோறும் ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

வயதானவர்களுக்கு முன்னுரிமை

கொரோனா தொற்றில் இருந்து தற்காத்து கொள்ளும் வகையில் ஒரு மீட்டர் சமூக இடைவெளியை கடைபிடித்து, முககவசம் அணிந்து பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட நாளில் பொருட்கள் பெறாத குடும்ப அட்டைதாரர்களுக்கு வருகிற ஜனவரி மாதம் 13-ந் தேதி (வியாழக்கிழமை) அன்று வழங்கப்படும். மேலும் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு நபர் மட்டுமே பொருட்கள் வாங்க வர வேண்டும்.

பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறுவதற்கு வருகின்ற வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரை நிற்க வைக்காமல் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதில் ஏதேனும் முறைகேடுகள் இருந்தால் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுபாட்டு அறையை 04175-233063 என்ற எண்ணுக்கும், அல்லது தாலுகா அளவில் நியமனம் செய்யப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்களின் செல்போன் எண்ணிற்கோ அல்லது சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலரின் செல்போன் எண்ணிற்கோ புகார் தெரிவிக்கலாம். 

இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

Next Story