கோவில்களில் சிறப்பு வழிபாடு
அமாவாசை, அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கூத்தாநல்லூர்:
அமாவாசை, அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கூத்தாநல்லூர்
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள வேளுக்குடியில் வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. இதில் வீரஆஞ்சநேயருக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட திரவிய பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வீரஆஞ்சநேயர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
கூத்தாநல்லூர் அருகே உள்ள வேளுக்குடியில் அங்காளபரமேஸ்வரி கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று அமாவாசையையொட்டி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள்பொடி உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு பொங்கல் படையலிட்டு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நீடாமங்கலம்
நீடாமங்கலம் அருகே உள்ள நரிக்குடி எமனேஸ்வரர் கோவிலில் அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து எமனேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. கோவில் குளத்தில் பக்தர்கள் நீராடி தங்களது முன்னோர்களுக்கு திதிகொடுத்து சாமி தரிசனம் செய்தனர்.
நீடாமங்கலம் அருகே உள்ள திருவோணமங்கலம் ஞானபுரியில் 33 அடி உயர சங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. இதையொட்டி ஆஞ்சநேயர் பச்சை பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு கிருஷ்ணானந்த தீர்த்த மகா சுவாமிகள் முன்னிலையில் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. முன்னதாக கோவில் மண்டபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் பஞ்சரத்தின கீர்த்தனைகள் பாடினர். மாலையில் வெள்ளி தேர் உலா நடைபெற்றது. அப்போது கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் பூஜிக்கப்பட்ட ஒரு ரூபாய் நாணயம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. அப்போது வீரஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. வீரஆஞ்சநேயருக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது. நீடாமங்கலம் விஸ்வக்சேனர் ஆஞ்சநேயர், லெட்சுமி நாராயணப்பெருமாள் கோவில் ஆஞ்சநேயர், ஆலங்குடி ஆஞ்சநேயர் சன்னதிகளிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
மன்னார்குடி
மன்னார்குடியில் உள்ள திருமஞ்சன வீதி செந்தூர ஆஞ்சநேயர் கோவில், மேலவீதி ஆஞ்சநேயர் கோவில், வெண்ணைத்தாழி மண்டபம் ஆஞ்சநேயர் கோவில், கீழராஜவீதி ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட ஆஞ்சநேயர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மன்னார்குடி திருமஞ்சன வீதியில் உள்ள செந்தூர ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு செந்தூரத்தால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து தனுர் மாத பஜனை குழுவினர் இசை வாத்தியங்கள் முழங்க பஜனை பாடல்களை பாடி ஆஞ்சநேயரை வழிபட்டனர். பின்னர் பக்தர்கள் அனுமன் வேடத்தில் நடனம் ஆடியவாறு வீதிகளில் ஊர்வலமாக சென்றனர். அவர்களுக்கு பக்தர்கள் ஆரத்தி எடுத்தனர்.
Related Tags :
Next Story