மின்னணு வாக்கு எந்திரங்களை சரிபார்க்கும் பணியில் பொறுப்புடன் பணியாற்ற வேண்டும்
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணியில் அலுவலர்கள் பொறுப்புடன் பணியாற்ற வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் டி.மோகன் அறிவுரை கூறினார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், திண்டிவனம், கோட்டக்குப்பம் ஆகிய 3 நகராட்சிகள், அனந்தபுரம், அரகண்டநல்லூர், வளவனூர், விக்கிரவாண்டி, மரக்காணம், செஞ்சி, திருவெண்ணெய்நல்லூர் ஆகிய 7 பேரூராட்சிகளில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள 1,105 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 550 கட்டுப்பாட்டு கருவிகளின் இருப்புநிலை சரிபார்த்து உறுதி செய்தல் மற்றும் இணையத்தில் உள்ளீடு செய்தல் பணிகள் விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்து வருகிறது.
இப்பணியை மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான டி.மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
பொறுப்புடன் பணியாற்ற அறிவுரை
இணையத்தில் உள்ளீடு செய்யப்பட்டுள்ள கட்டுப்பாட்டு கருவியின் பட்டியலின்படி கட்டுப்பாட்டு கருவிகள் அந்தந்த பெட்டியில் உள்ளதா என்றும் அதனை இயக்கி 100 சதவீதம் சரிபார்த்தும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் இணையத்தில் உள்ளீடு செய்ததிலும் பெட்டியில் உள்ளதிலும் வேறுபாடு இருப்பின் பெட்டியில் உள்ளவாறு இணையத்தில் திருத்தம் மேற்கொள்ளவும், திருத்தம் மேற்கொள்ளப்பட்டு கட்டுப்பாட்டு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பெட்டியின் மீது உரியவாறு இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்ட எண் விவரத்தை ஒட்டி முடிக்கவும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணியில் அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் பொறுப்புடன் பணியாற்ற வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராமகிருஷ்ணன், விழுப்புரம் நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story