ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை
அனுமன் ஜெயந்தியையொட்டி விழுப்புரம் மற்றும் செஞ்சி பகுதி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் திரு.வி.க. வீதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி நேற்று காலை 6.30 மணிக்கு பால், தயிர், நெய், சந்தனம், விபூதி, குங்குமம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் 8.30 மணியளவில் ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பெண்கள், அகல்விளக்கு ஏற்றி வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
சாலைஅகரம்- வாணியம்பாளையம்
இதேபோல் விழுப்புரம் அருகே சாலைஅகரம் தேவநாதசாமி நகரில் உள்ள ராமபக்த ஆஞ்சநேயர் கோவிலில் காலை 6.30 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் 8.30 மணிக்கு ஆஞ்சநேயருக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, மாலை 6.30 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வாணியம்பாளையத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் மாலை 3 மணிக்கு சுதர்சன ஹோமம், தன்வந்திரி ஹோமம், ஸ்ரீலட்சுமி ஹோமம், அனுமன் ஹோமம் நடந்தது. இதையடுத்து மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து உற்சவருக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதிலும் பக்தர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
செஞ்சி
செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் கோதண்டராமர் கோவில் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி ஆஞ்சநேயர் மற்றும் கோதண்டராமருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஆஞ்சநேயர் வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் செஞ்சிக்கோட்டை வீரஆஞ்சநேயர் கோவில், மேல்களவாய் சாலையில் உள்ள சஞ்சீவிராயர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
Related Tags :
Next Story