அனுமன் ஜெயந்தி விழா


அனுமன் ஜெயந்தி விழா
x
தினத்தந்தி 2 Jan 2022 10:46 PM IST (Updated: 2 Jan 2022 10:46 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் கொட்டும் மழையை பொருட்படுத்தாது பக்தர்கள் அதிகாலை முதல் அனுமனை தரிசனம் செய்தனர்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் கொட்டும் மழையை பொருட்படுத்தாது பக்தர்கள் அதிகாலை முதல் அனுமனை தரிசனம் செய்தனர்.
அவதாரம்
அவதாரம் என்றதும் நம் அனைவரின் மனதில் தோன்றுவது தசாவதாரம் ஆகும். சிவனும், விஷ்ணுவும் பல்வேறு காரணங் களுக்காக பலவித அவதாரங்களை எடுத்துள்ளனர். அவ்வாறு தூய்மையான பக்தி, ஞானம், வீரம், விவேகம் போன்றவற்றை உலகிற்கு எடுத்துக்காட்ட சிவபெருமான் எடுத்த அவதாரமே ஆஞ்சநேயர் அவதாரமாக இந்து சாஸ்திரங்களில் கூறப்படுகிறது. 
வாயுதேவனின் அம்சமாக அஞ்சனாதேவியின் மகனாக மார்கழி மாதம் அமாவாசை தினத்தன்று மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயர் பிறந்ததால் அன்றைய தினம் அனுமன் ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது. அனுமன் பிறந்த நாளை இவ்வாறு கொண்டாடும் போது தடைகளை உடைக்கும், தோஷங்களை நீக்கும் தன்மை கொண்ட ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தி அன்று வடைமாலை அணிவித்து பக்தர்கள் வேண்டுவது வழக்கம். 
இவ்வாறு ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று அனுமன் ஜெயந்தி தினம் அனுமன் கோவில்களில்  சிறப்பாக கொண் டாடப்பட்டது. ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பால ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. 
சிறப்பு சக்தி
ஆஞ்சநேயருக்கு வாலில் சக்தி அதிகம் என்பார்கள். அதற்கேற்ப இந்த ஆஞ்சநேயர் கோவில் மேல்பகுதியில் கோபுர விமானம் இல்லாமல் ஆஞ்சநேயர் வால்சுருட்டி அமர்ந்திருப்பது போல் உள்ளதாலும் பரிவார மூர்த்திகள் இல்லாமல் தனியாக ஆஞ்சநேயர் மட்டுமே உள்ள சிறப்பு சக்தி வாய்ந்த இந்த கோவிலில் அனுமன்ஜெயந்தி விழாவையொட்டி ஆஞ்சநேயருக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே விசேஷ திருமஞ்சன அபிஷேகம் நடைபெற்றது. 
கோவில் அர்ச்சகர் ராமகிருஷ்ணன் தலைமையில் பால ஆஞ்சநேயருக்கு துளசி மற்றும் வடைமாலை சாத்தப்பட்டு வெண்ணை சாத்தி தொடர்ந்து பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. சனியின் பார்வையில் சிக்கும் ராசிக்காரர்கள் அனுமனை வழிபட்டால் சனியின் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் என்று கூறப்படுவதால் சமீபத்தில் நடைபெற்ற சனிப்பெயர்ச்சியில் பாதிப்புக்குள்ளான ராசிக்காரர்கள் கொட்டும் மழையை பொருட்படுத்தாது நேற்று காலையிலேயே ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்து வழிபட்டனர். 
வடைமாலை
இதேபோல, ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள சேதுக்கரையில் எழுந்தருளியுள்ள சேதுபந்தன ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி ஆஞ்சநேயருக்கு வடைமாலையிட்டு வெண்ணை சாத்தி சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. 
 ராமேசுவரம் பஸ் நிலையம் அருகில் உள்ள சிரஞ்சீவி தாசபக்த ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி விழாவில் ஆஞ்சநேயருக்கு ஏராளமான அபிசேக ஆராதனைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு துளசி மாலை மற்றும் வடை மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதணை நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல, ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 16 அடி உயர ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி மகாஅபிசேகம் மற்றும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

Next Story