அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
மேல்மலையனூர்,
மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் அமாவாசை அன்று கோவிலின் வெளியில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா நோய்தொற்று பரவல் காரணமாக வெளியில் வைத்து ஊஞ்சல் உற்சவம் நடத்த அரசு தடை விதித்தது. இருப்பினும் ஆகமவிதிப்படி வழக்கமான பூஜைகள் தொடரலாம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கோவில் உட்பிரகாரத்தில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்று வருகிறது. அதன்படி மார்கழி மாத அமாவாசையையொட்டி நேற்று அதிகாலை அங்காளபரமேஸ்வாி அம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள சிவபெருமானுக்கும், அம்மனுக்கும் பால் தயிர், சந்தனம் மஞ்சள், விபூதி, குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம், தேன் பன்னீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். உற்சவ அம்மனுக்கு இடதுகரங்களில் சூலம், பாசம், கபாலம், வலதுகரங்களில் உடுக்கை, கத்தி, சங்கு, சின்முத்திரையுடன் ஜகத்ஜனனி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தது.
ஊஞ்சல் உற்சவம்
இதில் கொரோனா வழிகாட்டுமுறைகளை பின்பற்றி பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு 7 மணிக்கு அங்கிருந்த உற்சவ அம்மன் பம்பை, மேளம் முழங்க கோவிலை வலம் வந்து உட்பிரகாரத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் எழுந்தருளினார். பின்பு பூசாரிகள் பக்தி பாடல்கள் பாடினர். இரவு 8.25 மணிக்கு தாலாட்டுப்பாடல்கள் பாடி அம்மனுக்கு அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டவுடன் ஊஞ்சல் உற்சவம் நிறைவடைந்தது. ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. இருப்பினும் இந்த விழாவை பக்தர்கள் பார்க்க வசதியாக ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சி சமூக வலைத்தளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கஜேந்திரன், உதவி ஆணையர் ராமு, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, சந்தானம் பூசாரி, மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story