முள்படுக்கையில் படுத்து பெண் சாமியார் அருள் வாக்கு
திருப்புவனம் அருகே முள்படுக்கையில் படுத்து பெண் சாமியார் அருள் வாக்கு கூறினார்.
திருப்புவனம்,
திருப்புவனம் அருகே முள்படுக்கையில் படுத்து பெண் சாமியார் அருள் வாக்கு கூறினார்.
மண்டல பூஜை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள லாடனேந்தல் கிராமத்தில் பூங்காவன முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் நிர்வாகியாக பெண் சாமியார் நாகராணி அம்மையார் இருந்து வருகிறார். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அப்போது பெண் சாமியார் நாகராணி அம்மையார் 48 நாட்கள் விரதம் இருப்பார். விரதத்தின் இறுதி நாளன்று முள் படுக்கை மீது நின்று கொண்டும், ஆடியபடியும், முள் படுக்கையில் படுத்தும் பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறுவது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த ஆண்டு 45-வது மண்டல பூஜையை முன்னிட்டு நேற்று காலை அம்மனுக்கு 108 சங்காபிஷேக பூஜையும் அதன் பின்னர் முத்துமாரி அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பூங்காவன முத்துமாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
முள்படுக்கை
நிகழ்ச்சியை தொடர்ந்து கோவிலின் முன்புறம் சுமார் 7 அடி உயரத்திற்கு உடைமுள், கத்தாளைமுள் உள்பட பல முட்களை கொண்டு முள்படுக்கை அமைக்கப்பட்டு இருந்தது. சாமியார் நாகராணி அம்மையாரிடம் அருள்வாக்கு பெறுவதற்காக ஏராளமான பக்தர்கள் முள் படுக்கையை சுற்றி நின்று இருந்தனர். முன்னதாக பூசாரி மாரிமுத்து சுவாமிகள் முள்படுக்கைக்கு கற்பூரம் ஏற்றி தீபாராதனை செய்தார்.
பின்னர் நாகராணி அம்மையார் அந்த முள் படுக்கையில் நின்றபடியும், சாமி ஆடியபடியும், முள்படுக்கையில் படுத்த நிலையிலும் பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார்.
அபிஷேகம்
அப்போது அங்கே நின்றிருந்த திரளான பெண்கள் அருள் வந்து சாமி ஆடினார்கள். அதன்பின்னர் முள் படுக்கையில் இருந்து கீழே இறங்கி வந்த நாகராணி அம்மையாருக்கு அபிஷேகம் நடைபெற்றது.
இந்த மண்டல பூஜை விழாவில் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல், தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்து கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பூசாரி மாரிமுத்து சுவாமிகள் தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story