பொங்கல் பானை தயாரிக்கும் பணி பாதிப்பு
கொள்ளிடம் பகுதியில் பெய்த கனமழையால் பொங்கல் பானை தயாரிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மழைக்கால நிவாரணத்தை உயர்த்தி ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொள்ளிடம்:
கொள்ளிடம் பகுதியில் பெய்த கனமழையால் பொங்கல் பானை தயாரிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மழைக்கால நிவாரணத்தை உயர்த்தி ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மண்பானை தயாரிக்கும் பணி
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சுற்றுவட்டார பகுதியில் தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு பொங்கல் மண்பானை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கொள்ளிடம் பகுதியில் வேட்டக்குடி, ஆச்சாள்புரம், எடமணல், திருகருகாவூர், பழையபாளையம், கொப்பியம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு களிமண்ணை பதப்படுத்தி மண்பானை மற்றும் பொங்கல் வைப்பதற்கான விறகு அடுப்புகள், மண் சட்டி தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது பெய்துவரும் கனமழையினால் பொங்கல் பானை தயாரிக்கும் பணி ஸ்தம்பித்துள்ளது.
கனமழையால் தொழில் பாதிப்பு
இதுகுறித்து வேட்டங்குடி கிராமத்தில் மண்பானை தயாரிக்கும் தொழிலில் ஈடுப்பட்டுள்ள மாவட்ட மண்பாண்டம் தயாரிப்பு சங்க தலைவர் மாரிமுத்து, மண்பாண்ட தொழிலாளர்கள் சார்பில் கூறியதாவது:-
தமிழர் திருநாளான தைப்பொங்கலை முன்னிட்டு களிமண்ணால் பாரம்பரியமிக்க பொங்கல் பானை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது மண்பாண்ட தொழில் மிகவும் நலிவடைந்து வருகிறது. தொடர் கனமழையினால் இத்தொழிலில் ஈடுபட்டுவருவோர் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மழை காரணமாக பொங்கலுக்கு தயாராகும் மண்பானைகளை சுட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 3 மாத மழையினால் மண்பாண்ட தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிவாரணம் ரூ.10 ஆயிரமாக உயர்த்தி...
தமிழக முதல்-அமைச்சர், மண்பாண்ட தொழிலாளர்கள் நிலை அறிந்து மழைக்கால நிவாரணமாக வழங்கப்படும் ரூ.5 ஆயிரத்தை உயர்த்தி ரூ.10 ஆயிரமாக வழங்க வேண்டும். அதே நிலையில் விடுபட்ட மண்பாண்ட தொழிலாளர்களை கணக்கீடு செய்து அவர்களுக்கும் மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.
மேலும் மண்பாண்ட தொழில்கள் நலிந்து வருவதை தடுத்து மாவட்டம் தோறும் மண்பாண்ட தொழிலை இளைஞர்கள் கற்று கொள்ளும் வகையில் பயிற்சி கூடங்கள் அமைத்து பாரம்பரியம் மிக்க மண்பாண்ட தொழிலை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்- அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story