பாலாற்றில் வெள்ளப் பெருக்கு


பாலாற்றில் வெள்ளப் பெருக்கு
x
தினத்தந்தி 2 Jan 2022 6:01 PM GMT (Updated: 2 Jan 2022 6:01 PM GMT)

16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

சிங்கம்புணரி,
16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
பெரியகண்மாய்
திண்டுக்கல் நத்தம் பகுதியில் உள்ள கரந்த மலையில் இருந்து பாலாறு உருவாகி வருகிறது. இந்த ஆறு கொட்டாம்பட்டி அருகே பள்ளபட்டி வழியாக சிங்கம்புணரி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலப்பட்டி, கிருங்காக்கோட்டை, அணைக்கரைப்பட்டி, பட்ட கோவில்களம், உப்பாறு, பாலாறு இணையும் சிங்கம்புணரி பகுதி வழியாக சிவபுரிபட்டி, ஆ.காளாப்பூர், எஸ்.வி. மங்கலம், சிலநீர்பட்டி வழியாக திருப்பத்தூர் பெரிய கண்மாய் சென்றடையும். 
கரந்த மலையில் பெய்கிற அதிகப்படியான மழையால் பாலாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து திருப்பத்தூர் பெரிய கண்மாய் வரை சென்றடையும். இந்த பாலாற்று பகுதியில் கடந்த 2005-ம் ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சிலநீர் பட்டி கிராமத்திற்குள் வெள்ளம் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. 
அதன்பிறகு 2008-ம் ஆண்டு பெய்த கனமழையால் கரந்த மலையில் இருந்து பாலாறு வழியாக வந்த மழை நீர் ஆ.காளாப்பூர் பகுதியோடு நின்றது. அதன்பிறகு 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் 16 வருடங்களுக்கு பிறகு கரந்த மலையில் தொடர்ச்சியாக பெய்த மழையாலும் சிங்கம்புணரி பகுதியில் பெய்த மழையாலும் பாலாற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடியது. 
மகிழ்ச்சி
இந்தநிலையில் நேற்று முன்தினம் பெய்த கன மழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பள்ளபட்டியில் இருந்து கிருங்காக்கோட்டை, அணைக்கரைப்பட்டி சிங்கம் புணரி வழியாக திருப்பத்தூர் நோக்கி சென்றது. இதனால் சிங்கம்புணரி பகுதி விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வரும் காலங்களில் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு இந்த பகுதியில் நிலத்தடி நீர் உயர்ந்து தண்ணீர் பற்றாக்குறை இன்றி விவசாயம் செழிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Next Story