5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின


5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின
x
தினத்தந்தி 2 Jan 2022 11:40 PM IST (Updated: 2 Jan 2022 11:40 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 
மழைநீரில் நெற்பயிர்கள் மூழ்கின
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் கடந்த மூன்று நாட்களாக பெய்த தொடர் மழையால் கொண்டல், வள்ளுவக்குடி, தில்லைவிடங்கன், அகனி, திட்டை, சட்டநாதபுரம், விளந்திடசமுத்திரம், அத்தியூர், ஆதமங்கலம், பெருமங்கலம், கன்னியாக்குடி, மருதங்குடி, புங்கனூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள்  மழை நீரில் சாய்ந்து மூழ்கி வீணாகி வருகிறது.
இதேபோல் கதிர் வரும் நிலையில் உள்ள சம்பா நெற்பயிர்களும் பல்வேறு இடங்களில் மழைநீரில் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 
எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள்
குத்தாலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான சேத்திரபாலபுரம், திருமணஞ்சேரி, கடலங்குடி, வாணாதிராஜபுரம், ஆலங்குடி, வில்லியநல்லூர், தொழுதாலங்குடி, அசிக்காடு, அரையபுரம், மல்லியம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக விவசாயிகள் நடவு செய்திருந்த நெற்பயிர்கள் மழைநீரில் சாய்ந்து சேதமானது. வயலில் தேங்கிய மழை நீர் வடியாத காரணத்தினால் நெல்மணிகள் வயலில் உதிர்ந்து முளைக்கும் அபாய நிலையில் உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கன மழையால் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. 
மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
கொள்ளிடம் பகுதியில் பெய்த கன மழையினால் அறுவடைக்கு தயாரான நிலையில் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. அகரஎலத்தூர், கீழமாத்தூர் ஒலையாம்புத்தூர், அரசூர், ஆச்சாள்புரம், குன்னம், பழைய பாளையம், பனங்காட்டான்குடி ஆகிய பகுதிகளில் 3 ஆயிரம் ஏக்கர் வரை நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி உள்ளன. கொள்ளிடம் அருகே உள்ள பழையாறு மீனவ கிராமத்தில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீனவர்களின் விசைப்படகுகள் துறைமுகத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. 
மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகபட்சமாக மணல்மேட்டில் 93 மில்லி மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் பதிவான மழையளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
 மயிலாடுதுறை- 87, சீர்காழி-75, தரங்கம்பாடி-12, கொள்ளிடம்-9. நேற்று முன்தினம் மாலை முதல் படிப்படியாக குறைந்து மழை ஓய்ந்தது. 
மணல்மேடு
மணல்மேடு மற்றும் அதனைச்சார்ந்த கிராமங்களில் விவசாயம் மட்டுமே முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதேபோல் ஊடுபயிராக விதைக்கப்பட வேண்டிய உளுந்து மற்றும் பச்சைப்பயறு வகைகளும் விதைக்க முடியாமல் போய்விடும் என்றும், இந்த மழையால் மகசூல் கடுமையாக பாதிக்கும் என்றும் விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

Next Story