பொங்கல், ஜல்லிகட்டுக்கு தடை விதித்தால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை
கொரோனா தொற்று காரணமாக பொங்கல், ஜல்லிகட்டு நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்தால் அதன் பின்விளைவுகளை அரசு சந்திக்க நேரிடும் என இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் தெரிவித்தார்.
காட்பாடி
பொங்கல், ஜல்லிகட்டுக்கு தடை விதித்தால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை
இந்து வியாபாரிகள் நலசங்கம் கோட்ட மாநாடு காட்பாடியில் நேற்று நடந்தது. மாநாட்டற்கு இந்து முன்னணி கோட்ட செயலாளர் ரவி தலைமை தாங்கினார். வேலுார் கோட்டத்தலைவர் மகேஷ், பொருளாளர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், இந்து வியாபாரிகள் சங்க மாநில தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
மாநாட்டில் ரிஷிகேஷ் சுவாமிகள், இளம்பாண்டியன், வணிகர் சங்க வேலூர் மாவட்டத்தலைவர் ஞானவேலு, இளைஞர் அணி செயலாளர் அருண்பிரசாத், நகர செயலாளர் ஸ்ரீராம்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாநாடு முடிந்ததும் இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
130 கோவில்கள் இடிப்பு
இந்து வியாபாரிகள் சங்கம் மற்ற மதத்தினருக்கு விரோதமாக ஆரம்பிக்கப்பட்டது இல்லை. ஏழை, எளிய இந்து வியாபாரிகளுக்கு உதவி செய்வதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. வட்டியில்லா கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளூர் வியாபாரத்தை மையாக வைத்து சுதேச வணிகத்தை வளர்க்க வேண்டும். கோவில்கள் அரசு கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது என வலியுறுத்தி வருகிறோம். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து, கோவில்களை வைத்து தான் செயல்பாடுகள் உள்ளது.
சென்னை கொசப்பேட்டையில் மீன்மார்க்கெட் அமைக்க ரூ.155 கோடி கோவில் பணம் கடன் வாங்குவதாக தெரிவிக்கின்றனர். அரசுக்கு கடன் வாங்க வேறு வழி இல்லையா?. பக்தர்கள் காணிக்கை மூலமாக ஏராளமான பணம் கோவில்களுக்கு வருகிறது. அதில் மாற்றம் இல்லை. இவ்வளவு பணம் இருந்தும் நகைகளை ஏன் உருக்க வேண்டும். கோவில் நிலங்கள் இத்தனை கோடிக்கு மீட்கப்பட்டதாக தினமும் தவறான தகவலை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து வருகிறார். மதசார்பற்ற அரசு என்றால் கிறிஸ்தவ ஆலயம், மசூதிகளை அரசே நிர்வாகம் செய்யலாமே?. ஆனால், மதசார்பற்ற அரசு என கூறி கோவில்களில் கை வைப்பது தவறு. இந்த அரசு பொறுப்பு ஏற்ற நாள் முதல் 130 கோவில்களை இடித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக்கூடாது
கோவில்களின் ஆகமவிதிப்படி பூஜைகள் நடக்கிறது. ஆனால், நள்ளிரவு 12 மணிக்கு திறப்பது இல்லை. இதை மீறி கோவில்கள் திறக்கப்பட்டது எதற்காக. சிறப்பு கட்டணம் என்றால் பக்தர்களிடம் பணம் வசூலிப்பதற்காக தான். இதை ஆரம்பத்தில் இருந்து நாங்கள் எதிர்த்து வருகிறோம். இதுபோன்ற அநியாயங்களை எப்போதும் இந்துக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். கொரோனா தொற்று காரணமாக பொங்கல், ஜல்லிகட்டு நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்தால் அதன் பின்விளைவுகளை அரசு சந்திக்க நேரிடும். இந்துக்களின் உணர்வுகளுக்கு தி.மு.க அரசு மதிப்பளித்து அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story