தஞ்சையில் அனுமார் கோவில்களில் சிறப்பு வழிபாடு
அனுமன்ஜெயந்தியையொட்டி தஞ்சையில் உள்ள பல்வேறு அனுமார் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம்செய்தனர்.
தஞ்சாவூர்:-
அனுமன்ஜெயந்தியையொட்டி தஞ்சையில் உள்ள பல்வேறு அனுமார் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம்செய்தனர்.
அனுமன்ஜெயந்தி
ஆஞ்சநேயர் பிறந்த மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தன்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு அனுமன்ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அனுமார் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தஞ்சை மேலவீதியில் புகழ்பெற்ற சனி தோஷம் போக்கும் மூலை அனுமார் கோவில் உள்ளது. இக்கோவில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் பிரதாப சிம்மனால் கட்டப்பட்டது. தஞ்சையைஆண்ட மராட்டிய மன்னர்கள் இஷ்ட தெய்வமாக மூலை அனுமாரை வழிபட்டனர்.
மூலை அனுமார் கோவில்
மூலை அனுமார் கோவில் இந்துசமய அறநிலையத்துறை மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ளது.மூலை அனுமார் வாலில் நவக்கிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம். ராமாயணத்தில் ராவணனால் சிறைபிடிக்கப்பட்டு பெரும் துன்பங்களுக்கு ஆளான நவகிரகங்களை தன் பலத்தால் விடுதலையாக்கியவர். இதன் பலனாக தனக்கோ தன் பக்தர்களுக்கோ யாதொரு தீங்கும் செய்யமாட்டோம் என நவக்கிரகங்களிடம் சத்தியபிரமாணம் பெற்றவர். இவரை வழிப்படுகின்றவர்களுக்கு பயம் நீங்கும். நவக்கிரக தோஷம் விலகும். வாஸ்து தோஷம் விலகும். ஆற்றலும் மேன்மையும் பெற்று செல்லும் இடங்களில் எல்லாம் வெற்றியை தரக்கூடியவர் மூலை அனுமார் என்பது ஐதீகம்.
இத்தகைய புகழ்பெற்ற தஞ்சை மூலை அனுமார் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று காலை 18 வகையான பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. திரவியப்பொடி, மஞ்சள் பொடி, அரிசி மாவு, கரும்புச்சாறு, நெல்லிமுள்ளி, எலுமிச்சை சாறு, நார்த்தபழச்சாறு, மாதுளை பழச்சாறு, இளநீர், தேன், நெய், பால் தயிர், தேங்காய் துருவல், பஞ்சாமிர்தம், பன்னீர், சந்தனம் உட்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தீபாராதனை நடைபெற்றது.
மலர் அலங்காரம்
மாலை 6 மணிக்கு மான் வாகனத்தில் மலர் அலங்காரத்தில் மூலை அனுமார் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆண்டுதோறும் தஞ்சையில் உள்ள முக்கிய நான்கு வீதியில் சுவாமி புறப்பாடு நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக வீதி உலா நடைபெறவில்லை. மாலை 6.30 மணிக்கு அல்லல் போக்கும் அமாவாசை 18 முறை வலம் வரும் நிகழ்ச்சியை தொடர்ந்து மூலை அனுமாருக்கு 1008 எலுமிச்சை பழங்களால் ஆன மாலை சாற்றி சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரினசம் செய்தனர்.
இதே போல் தஞ்சை ரெயிலடி ஆஞ்சநேயர், பில்லுக்காரத்தெரு கல்லணைக்கால்வாய் கரையில் உள்ள ஆஞ்சநேயர், தஞ்சை சிவகங்கை பூங்கா வளாகத்தில் உள்ள ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
Related Tags :
Next Story