ஒரே நாளில் 30 பேருக்கு கொரோனா
குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்துள்ளது. ஒரே நாளில் 30 பேர் நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். எனவே பொதுமக்கள் வழிகாட்டு நெறி முைறகளை தீவிரமாக கடைபிடிக்குமாறு சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்துள்ளது. ஒரே நாளில் 30 பேர் நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். எனவே பொதுமக்கள் வழிகாட்டு நெறி முைறகளை தீவிரமாக கடைபிடிக்குமாறு சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு
நாடு முழுவதும் உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் நூறுக்கும் மேற்பட்டோருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டு இருக்கிறது. எனவே குமரி மாவட்டத்தில் ஒமைக்ரான் பரவாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
எனினும் துபாயில் இருந்து வந்த வாலிபருக்கும், அவருடைய தாயாருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் குளச்சலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர்கள் கேரளாவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க குமரி மாவட்டத்தில் தற்போது கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. அதாவது கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை குமரி மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 10-க்குள்ளேயே இருந்து வந்தது. ஆனால் தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் 31-ந் தேதி 32 பேருக்கு தொற்று உறுதியானது. 1-ந்தேதி 27 பேருக்கு தொற்று இருப்பது தெரிய வந்தது.
30 பேருக்கு தொற்று
இந்த நிலையில் நேற்று ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, சோதனை சாவடிகள் மற்றும் களப்பணியாளர்கள் மூலமாக சளி பரிசோதனை செய்யப்பட்டது.
அப்போது 30 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது. இதில் அதிகப்படியாக நாகர்கோவிலில் 20 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
நாகர்கோவில் ராமன்புதூர் செயின்ட் மேரீஸ் தெருவில் மட்டும் 2 குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கும், பிற பகுதிகளைச் சேர்ந்த 12 பேருக்கும் என மொத்தம் 20 பேர் நோய் தொற்றுக்கு ஆளாகி இருப்பதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதில் நோய் தொற்று அதிகமாக இருப்பவர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும், தொற்று பாதிப்பு குறைவாக இருப்பவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தி.மு.க. பிரமுகர்
இந்த நிலையில் நாகர்கோவிலை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ஒருவருக்கும், அவருடைய குடும்பத்தில் 2 பேருக்கும் என மொத்தம் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுபற்றி மாநகர் நல அதிகாரி விஜயசந்திரனிடம் கேட்டபோது, தியேட்டர்கள், பூங்காக்கள் போன்றவற்றில் அரசு அறிவித்துள்ளபடி 50 சதவீதம் பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். அரசு தெரிவித்துள்ள விதிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவ- மாணவிகளுக்கும் கொரோனா தடுப்பூசி இன்று (திங்கட்கிழமை) முதல் செலுத்தப்பட உள்ளது. எனவே தகுதியான அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
நாகர்கோவில் மாநகரில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால், நோய் தடுப்பு நடவடிக்கையாக அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். மேலும் வழிகாட்டு நெறிமுறைகளை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story