ஜீப் மீது மோட்டார் சைக்கிள் மோதல் வாலிபர் பலி
ஜீப் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.
கடையம்:
பாப்பாக்குடி அருகே செங்குளத்தைச் சேர்ந்தவர் துர்காராஜ். இவருடைய மகன் சுவீந்தர் (வயது 19). அதேபகுதியைச் சேர்ந்தவர் சுடலைமுத்து மகன் மாரியப்பன் (21). நண்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் மாலையில் மோட்டார் சைக்கிளில் துப்பாக்குடிக்கு புறப்பட்டு சென்றனர். ஆழ்வார்குறிச்சி அருகே இடைகால் தனியார் கல்லூரி அருகில் சென்றபோது, முன்னால் சென்ற அரசு பஸ்சை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த ஜீப்பும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயமடைந்த சுவீந்தர், மாரியப்பன் ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி சுவீந்தர் நேற்று காலையில் பரிதாபமாக உயிரிழந்தார். மாரியப்பனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story