1 லட்சத்து 41 ஆயிரம் சிறுவர்-சிறுமிகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி-கலெக்டர் அனிஷ்சேகர் தகவல்
மதுரை மாவட்டத்தில் 1 லட்சத்து 41 ஆயிரம் சிறுவர்-சிறுமிகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி போடப்படுகிறது என்று கலெக்டர் அனிஷ்சேகர் தெரிவித்துள்ளார்.
மதுரை,
மதுரை மாவட்டத்தில் 1 லட்சத்து 41 ஆயிரம் சிறுவர்-சிறுமிகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி போடப்படுகிறது என்று கலெக்டர் அனிஷ்சேகர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தடுப்பூசி கட்டாயம்
தமிழகத்தில் இதுவரை 4.97 கோடி பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 3.36 கோடி பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் 15 முதல் 18 வயது வரை உள்ள சிறுவர், சிறுமியர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பயின்றுவரும் 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. குறிப்பாக 2007-ம் ஆண்டிற்கு முன்னர் பிறந்த அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்கள் என்றும் இவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
கோவாக்சின்
இந்த தடுப்பூசி போடும் பணி 3-ந் தேதி (இன்று) முதல் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் 15 முதல் 18 வரை உள்ள மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார். மதுரை மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 41 ஆயிரம் சிறுவர்-சிறுமிகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தும் பணி நடக்கிறது.
ஊரக பகுதிகளில் சுமார் 53 ஆயிரம் சிறுவர்-சிறுமிகளுக்கும், மாநகராட்சி பகுதிகளில் சுமார் 66 ஆயிரம் சிறுவர்-சிறுமிகளுக்கும், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ மாணவர்கள் மற்றும் பள்ளி செல்லா சிறுவர்-சிறுமிகளுக்கும் தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் பள்ளியிலேயே தடுப்பூசி செலுத்துவதற்கும், கோவின் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்வதற்கும் ஊரகப்பகுதிகள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், 15 முதல் 18 வயது வரை உள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story