கொள்ளிடம் ஆற்றில் தவறி விழுந்த வாலிபரின் கதி என்ன?
கொள்ளிடம் ஆற்றில் தவறி விழுந்த வாலிபரின் கதி என்ன? என்பது தெரியவில்லை.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் கோழிப்பண்ணையின் விற்பனை நிலையத்தில் திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியை சேர்ந்த கவுதம்(வயது 23), திண்டுக்கல் மாவட்டம் கள்ளுக்கோட்டையை சேர்ந்த லோகநாதன், சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பகுதியை சேர்ந்த விஜயகுமார், சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியை சேர்ந்த கதிர்வேல், ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த அஸ்வின் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று முன்தினம் புத்தாண்டை முன்னிட்டு இறைச்சி விற்பனை தீவிரமாக நடைபெற்றதால், ஞாயிற்றுக்கிழமையான நேற்று புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட அவர்கள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று மதியம் தா.பழூர் அருகே உள்ள மதனத்தூர் கொள்ளிடம் ஆற்றுக்கு 5 பேரும் வந்தனர். ஆற்றில் குளித்துவிட்டு இடுப்பளவு தண்ணீரில் நடந்து சென்று ஆற்றின் உள்ளே உள்ள சிறிய திட்டுப்பகுதியில் அமர்ந்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, பின்னர் கரைப்பகுதிக்கு நடந்து வந்துள்ளனர். அப்போது கவுதம் ஆழமான பகுதி இருப்பது தெரியாமல் ஆற்றில் தவறி விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாலும், 2 நாட்களாக பெய்த மழை காரணமாகவும் கூடுதல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஆற்றில் தண்ணீரின் வேகத்தில் கவுதம் அடித்துச் செல்லப்பட்டார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மற்ற 4 பேரும் ஆற்றின் கரை வழியாக ஓடிச்சென்று அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. இது பற்றி தா.பழூர் போலீசார், ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் இருள் சூழ்ந்துவிட்டதால் ஆற்றில் இறங்கி தேட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதற்கிடையில் போலீசார் அளித்த தகவலின்பேரில் கொள்ளிடம் கரையோரத்தில் உள்ள ஊராட்சிகளின் தலைவர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கரையோரங்களில் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் கவுதமின் நிலை என்ன? என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து துறையூரில் உள்ள கவுதமின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story