கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா
கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது.
பெரம்பலூர்:
அனுமன் ஜெயந்தி விழா
ஆண்டுதோறும் மார்கழி மாதம் அமாவாசை மூல நட்சத்திரத்தன்று அனுமன் ஜெயந்தி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூர் அருகே பூமலை சஞ்சீவிராயர் மலையின் அடிவாரத்தில் உள்ள வழித்துணை ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது.
இதையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவிலில் அனுக்ஞை, தன பூஜை, கலச பூஜை, சுதர்சன ஹோமம், திருமஞ்சனம் ஆகியவை நடைபெற்றது. பின்னர் ஆஞ்சநேயருக்கு பால், பன்னீர், இளநீர், நெய், சந்தனம், குங்குமம், விபூதி உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சுவாமிக்கு வடை மாலை சாற்றப்பட்டு காலை 8 மணியளவில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பாடாலூர், பெருமாள்பாளையம், இரூர், திருவளக்குறிச்சி, ஆலத்தூர் கேட், நாரணமங்கலம், விஜயகோபாலபுரம், மருதடி, கூத்தனூர், சீதேவிமங்கலம், புதுக்குறிச்சி ஆகிய கிராமங்களில் இருந்தும் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருண்பாண்டியன், செயல் அலுவலர் ஜெயலதா, கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
கம்பத்து ஆஞ்சநேயர்
இதேபோல் பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலில் உள்ள ராமர், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் கோவிலின் முன்பு உள்ள கம்பத்து ஆஞ்நேயருக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். இரவில் கம்பத்து ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றப்பட்டது. இதேபோல் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் கோவில்களில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
Related Tags :
Next Story