சொத்து பிரச்சினையில் மோதல்: தம்பி வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிய அண்ணன்-சேலத்தில் பரபரப்பு
சேலம் சீலநாயக்கன்பட்டியில் சொத்து பிரச்சினையால் ஏற்பட்ட மோதலில் தம்பி வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை அண்ணன் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அன்னதானப்பட்டி:
சேலம் சீலநாயக்கன்பட்டியில் சொத்து பிரச்சினையால் ஏற்பட்ட மோதலில் தம்பி வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை அண்ணன் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சொத்து பிரச்சினை
சேலம் சீலநாயக்கன்பட்டி பெருமாள் கோவில் மேடு பகுதியை சேர்ந்தவர் துரை. இவருடைய மனைவி கல்யாணி (வயது 58). இவர்களுக்கு சரவணன் (30), கேசவன் (27) என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் சரவணன் கூலித்தொழிலாளி ஆவார். தம்பி கேசவன் சேலத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
கடந்த 8 மாதங்களுக்கு முன்பு துரை, உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இதையடுத்து கல்யாணி அவரது இளைய மகன் கேசவன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர்களின் வீட்டின் பக்கத்து தெருவில் சரவணன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனிக்குடித்தனம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் அண்ணன்-தம்பிக்கு இடையே அவர்களது வீடு, நிலம் சம்பந்தப்பட்ட சொத்து பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. தாயார் இருவரையும் சமாதானம் செய்து வந்துள்ளார்.
வெடிகுண்டு வீச்சு
இந்த நிலையில் நேற்று மாலை 6.30 மணியளவில் சொத்து பிரச்சினை தொடர்பாக பேசுவதற்கு தம்பி கேசவனை பார்க்க அண்ணன் சரவணன் அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.இதில் ஆத்திரம் அடைந்த சரவணன் கோபமாக அங்கிருந்து வெளியே சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து அங்கு வந்த சரவணன், தான் கொண்டு வந்த பெட்ரோல் குண்டுகளை, தம்பி கேசவன் வீட்டின் மீது வீசி உள்ளார். இதில் வீட்டின் கதவு தீப்பிடித்து எரிந்து சேதம் அடைந்தது.
இதனிடையே வீட்டின் கதவில் வெடிகுண்டு வீசியதில், தீப்பற்றி எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் இது குறித்து அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
போலீசார் விசாரணை
மேலும் இது குறித்து கேசவன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணன் மற்றும் அவருடைய குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சொத்து பிரச்சினையில் தம்பியை பழிவாங்க அவரது வீட்டின் மீது அண்ணன் பெட்ரோல் குண்டுகளை வீசிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story