தூத்துக்குடி, தென்காசியில் ேமலும் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு நெல்லை ஆஸ்பத்திரியில் ஒமைக்ரான் அறிகுறியுடன் 2 பேர் அனுமதி
ேமலும் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு
நெல்லை:
தூத்துக்குடி, தென்காசியில் மேலும் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் ஒமைக்ரான் அறிகுறியுடன் 2 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
60 பேருக்கு கொரோனா
நெல்லை மாவட்டத்தில் நேற்று புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 49 ஆயிரத்து 832 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 49 ஆயிரத்து 305 பேர் குணமடைந்து உள்ளனர். 91 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் நேற்று 3 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 27 ஆயிரத்து 426 ஆக உயர்ந்துள்ளது. 26 ஆயிரத்து 927 பேர் குணமடைந்துள்ளனர். 46 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது. நேற்று மாவட்டத்தில் மேலும் 45 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 56 ஆயிரத்து 730 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 56 ஆயிரத்து 148 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டம் முழுவதும் ஆஸ்பத்திரிகளில் 170 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒமைக்ரான் அறிகுறி
இதற்கிடையே பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த கொரோனா நோயாளிகள் 2 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்களுக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்றுக்கான அறிகுறி காணப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருக்கிறதா? என்பதை கண்டறிவதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பரிசோதனை முடிவு கிடைத்த பிறகு அடுத்தகட்ட சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிகிறது. இதனால் சுகாதார துறை அதிகாரிகள் அடுத்தக்கட்ட தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
பரிசோதனை வசதி
மேலும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு பல்வேறு ஆய்வகங்களில் வசதி ஏற்படுத்தப்பட்டது போல் ஒமைக்ரான் வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளவும் தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கான உபகரணங்களும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் ஒமைக்ரான் தொற்று பரிசோதனை செய்து இங்கேயே முடிவு தெரிவிக்கப்படும் என்று தெரிகிறது.
இதுகுறித்து ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி டீன் ரவிச்சந்திரன் கூறுகையில், ‘‘பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில், ஒமைக்ரான் தொற்று பாதிப்பு ஏற்பட்டு இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஒமைக்ரான் அறிகுறி இருப்பவர்களுக்கு இதுவரை சளி மாதிரிகளை வெளியே அனுப்பி பரிசோதனை செய்யப்பட்டது. இனிமேல் இங்கு பரிசோதனை செய்யப்படும்’’ என்றார்.
.............
Related Tags :
Next Story