கொரோனாவால் உயிரிழப்பு: 1,193 குடும்பத்தினருக்கு தலா ரூ.50 ஆயிரம் கருணைத்தொகை-கலெக்டர் தகவல்
சேலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த 1,193 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 ஆயிரம் கருணைத்தொகை வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த 1,193 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 ஆயிரம் கருணைத்தொகை வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ரூ.50 ஆயிரம் கருணைத்தொகை
கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணைத்தொகையாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து கருணைத்தொகை வழங்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த கருணைத்தொகை பெறுவதற்கு சேலம் மாவட்டத்தில் மருத்துவத்துறையினரால் கொரோனா இறப்பு என அறிவிக்கப்பட்ட மொத்தம் 1,712 பேரில் இதுவரை 1,193 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.50 ஆயிரம் கருணைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 519 பேரில் 51 பேர் பிற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. 39 பேருக்கு வாரிசுதாரர் பிரச்சினை மற்றும் சட்ட ரீதியான சிக்கல்கள் காரணமாக வழங்க இயலாத நிலை உள்ளது.
109 பேருக்கு பிற காரணங்களுக்காக நிலுவையில் உள்ளது. மீதமுள்ள 320 பேருக்கு உரிய ஆவணங்கள் முழுமையாக தாக்கல் செய்யப்படாததால் கருணைத் தொகை வழங்க இயலாத நிலையில் உள்ளது. இவர்கள் உடனடியாக தக்க ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கலாம்
உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்காத வாரிசுதாரர்கள் கருணைத்தொகை கோரி இணைய தளத்தில் (www.tn.gov.in) இறப்புச்சான்று, ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கை, சி.டி. ஸ்கேன் அறிக்கை, ஆதார் அட்டை, வாரிசு சான்று, வாரிசுகளின் வங்கிக் கணக்கு எண் ஆகிய ஆவணங்களுடன் உடனடியாக விண்ணப்பித்து சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகங்களை அணுகுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் மருத்துவத்துறையினரால் கொரோனா இறப்பு என அறிவிப்பு செய்யப்படாத, ஆனால் கொரோனா மரணம் என கோரப்படும் நபர்களும் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம். அந்த மனுக்கள் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான மருத்துவக்குழுவினர் மூலம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இறப்பின் காரணம் சார்ந்து உரிய சான்று அளிக்க ஆய்வு செய்யப்படும். தகுதியுடையவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story