சிறுபான்மை மக்களுக்கு பா.ஜனதா கட்சி எதிரானது அல்ல


சிறுபான்மை மக்களுக்கு பா.ஜனதா கட்சி எதிரானது அல்ல
x
தினத்தந்தி 3 Jan 2022 2:21 AM IST (Updated: 3 Jan 2022 2:21 AM IST)
t-max-icont-min-icon

சிறுபான்மை மக்களுக்கு பா.ஜனதா கட்சி எதிரானது அல்ல. அரசியல் ஆதாயத்துக்காக சிலர் பொய் பிரசாரம் செய்கிறார்கள் என நாகர்கோவிலில் நடந்த கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.

நாகர்கோவில்:
சிறுபான்மை மக்களுக்கு பா.ஜனதா கட்சி எதிரானது அல்ல. அரசியல் ஆதாயத்துக்காக சிலர் பொய் பிரசாரம் செய்கிறார்கள் என நாகர்கோவிலில் நடந்த கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
அண்ணாமலை பேட்டி
நாகர்கோவிலில் நேற்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒவ்வொரு மாநிலத்துக்கும் பலகட்டமாக பேரிடர் நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது. டிசம்பர் 31-ந் தேதியன்று ரூ.3 ஆயிரத்து 331 கோடிக்கான பேரிடர் நிவாரண நிதி 6 மாநிலங்களுக்கு வழங்கப்பட்டன. இது கடந்த 2021-ம் ஆண்டு மே வரை நடந்த பேரிடருக்கானது. அதன் பிறகு நடந்த பேரிடர்களுக்கு அடுத்த கட்டத்தில் நிவாரணம் வழங்கப்படும். தமிழகத்துக்கு மத்திய அரசு 75 சதவீதமும், மாநில அரசு 25 சதவீதமும் எஸ்.டி.ஆர்.எப். திட்டத்தின் மூலம் பேரிடர் நிதி வழங்கப்படுகிறது. அதற்கான 75 சதவீத நிதியை மத்திய அரசு வழங்கியது. ஆனால் மாநில அரசு ஒதுக்கவில்லை.
தமிழக வளர்ச்சிக்கு படிக்கல்
பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தில் டெல்டா பகுதியில் ஒரு விவசாயி கூட பணம் வரவில்லை என சொல்ல முடியாது. பிரதமர் மோடி வந்த பிறகு டெல்டா பகுதியில் 100 சதவீதம் பயிர் காப்பீடு செயல்படுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் சேகர்பாபு ஒரு கருத்தை பதிவிடுவதற்கு முன்பு அதனை நன்கு ஆராய்ந்து, தெளிவாக அறிந்து புரிந்து பதிவிட வேண்டும். மேலும் அவர் கண்ணாடி முன்பு நின்று சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு படிக்கல்லாக இருக்கிறது.
தி.மு.க. அரசு ஆட்சியில் இல்லாத போது தடுப்பூசி போடாதீர்கள் என்றார்கள். இப்போது தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்களை மத்திய அரசு கொடுக்கிறது என டி.ஆர்.பாலு சொல்கிறார். எனவே டி.ஆர்.பாலுவுடன், அமைச்சர் சேகர் பாபு கலந்து பேசிவிட்டு கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். பா.ஜனதாவை சேர்ந்த 24 பேர் மீது தி.மு.க.வினர் புகார் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் போலீசார் கைது செய்கிறார்கள். தமிழக போலீசாருக்கு என தனித்துவம் வாய்ந்த கம்பீரம் உள்ளது. அந்த கம்பீரத்தை அரசியலுக்காக விட்டுக்கொடுக்காதீர்கள். அதனால் தான் தமிழக போலீசார் கடமை தவறாமல் செயல்பட வேண்டும் என டி.ஜி.பி அறிக்கை வெளியிட்டுள்ளார். டி.ஜி.பி.யின் அறிக்கையை நான் வரவேற்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
போப் பிரான்சிஸ்-மோடி சந்திப்பு
முன்னதாக குமரி மாவட்ட சிறுபான்மையின இளைஞர்கள் பா.ஜனதாவில் இணையும் கூட்டம் நேற்று நாகர்கோவிலில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது. கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:-
ராகுல்காந்தி கன்னியாகுமரி, கேரளா வந்தால் கிறிஸ்தவராகி விடுவார். உத்தரபிரதேசம், ராஜஸ்தான் சென்றால் இந்துத்துவா பற்றி பேசுவார். ஆனால் பா.ஜ.க. மத சார்பற்ற அரசு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கம் கொண்ட கட்சி.
ராகுல்காந்தி சொந்த தொகுதியான அமேதியில் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார். இத்தனை காலமாக மதத்தை வைத்து அரசியல் செய்யும் காங்கிரசுக்கு சிறுபான்மையினர் ஓட்டு போடவில்லை. சிறுபான்மையின மக்களுக்கு எதிரானவர் என பொய்யான கருத்துகளை பா.ஜனதா கட்சி மீது சிலர் அரசியல் ஆதாயங்களுக்காக பரப்புகின்றனர். போப் பிரான்சிசை சந்தித்த பிரதமர் மோடி 60 நிமிடம் பேசி இருக்கிறார். இத்தகைய 60 நிமிட சந்திப்பு எந்த நாட்டு தலைவருக்கும் இதுவரை ஒதுக்கப்படவில்லை. தேசிய குடியுரிமை சட்டம் சிறுபான்மையின மக்களுக்கு நல்ல ஒரு சட்டம். இதுபற்றி தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன.
நான்கு வழிச்சாலை திட்டம்
5 ஆண்டுகள் பொன்.ராதாகிருஷ்ணன் அமைச்சராக இருந்தபோது பா.ஜனதா ஆட்சியில் ரூ.40 ஆயிரம் கோடி வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்தார். அவர் காலத்தில் கொண்டு வந்த நான்கு வழிச் சாலை திட்டம், தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. மண் இல்லை என்ற காரணத்துக்காக கிடப்பில் போடும் நிலை உருவாகி உள்ளது. மீன்வளத்துறைக்கு என தனி அமைச்சகம் முதன் முதலில் கொண்டு வந்தது பா.ஜனதா அரசு. சிறுபான்மையினர் மற்றும் மீனவ மக்களுக்கு எப்போதும் பா.ஜனதா அரசு அரணாக இருந்து வருகிறது. 
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் எம்.எல். ஏ.க்கள் எம்.ஆர்.காந்தி, நயினார் நாகேந்திரன், மாவட்ட தலைவர் தர்மராஜ், பொருளாளர் முத்துராமன், துணை தலைவர் தேவ், நகரசபை முன்னாள் தலைவி மீனாதேவ், வேலூர் இப்ராகிம் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சகாயம் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட சிறுபான்மையினர் பா.ஜ.க.வில் இணைந்தனர்.

Next Story