‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 3 Jan 2022 2:43 AM IST (Updated: 3 Jan 2022 2:43 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

‘தினத்தந்தி’க்கு நன்றி  

கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் விபத்துகளை குறைக்க சாலையின் நடுவில் தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 5 ரோடு ரவுண்டானா பகுதியில் பர்கூர் பஸ்கள் நிற்க கூடிய இடத்தின் அருகிலும், மேலும் சில இடங்களிலும் தடுப்புசுவரை சிலர் உடைத்து இருசக்கர வாகனங்கள் செல்லும் வகையில் வசதி ஏற்படுத்தி கொண்டனர். இதனால் விபத்துகளும் தினமும் நடந்து வந்தன.
இது குறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த போலீசார் விபத்துகளை தடுக்கும் வகையில், உடைக்கப்பட்ட தடுப்பு சுவர்களை அடைக்கும் விதமாக அதில் தடுப்பு கம்பிகளை (பேரி கார்டு) வைத்தனர். செய்தியை வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த போலீசாருக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
-பொதுமக்கள், கிருஷ்ணகிரி.
========
முடங்கி கிடக்கும் சாலை பணி

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே மாங்கரை ஊராட்சி சாலைகுள்ளாத்திரம்பட்டியில் தார் சாலை அமைக்க கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஜல்லிக்கற்கள் போடப்பட்டன. ஆனால் நீண்ட காலம் ஆகியும் பணி முடிக்கப்படாமல் உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே முடங்கி கிடக்கும் சாலை பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-போ.ரவிச்சந்திரன், சாலைகுள்ளாத்திரம்பட்டி.
==
நடவடிக்கை எடுக்கப்படுமா?

சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் ஆங்காங்கே இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதனால் பள்ளி வளாகத்திற்குள் ஆடு, மாடு, பன்றி, குதிரை என கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இதை தடுக்க சுற்றுச்சுவர் இடிந்த பகுதிகளில் அவற்றை சீரமைப்பதுடன், சுவரை உயர்த்தி கட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாதேஸ்வரன், ஆத்தூர்.
==
குடிநீர் வீணாகிறது

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் ராசிபுரம்-ஆட்டையாம்பட்டி பிரதான சாலையில் காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்து 2 மாதங்களாக குடிநீர் வீணாகி சாலையோரம் தேங்கி நிற்கிறது. இதனால் நடந்து செல்லும் பொதுமக்கள், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே உடைந்த குடிநீர் குழாயை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கே.சிங்காரம், வெண்ணந்தூர், நாமக்கல்.
==

ஜல்லிக்கற்கள் பெயர்ந்த சாலை

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கோவில்புத்தூரில் இருந்து சூலாங்குறிச்சி செல்லும் சாலையில், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து உள்ளன. இதனால் அந்த சாலை பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. இதனால் ரேஷன்கடை, ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற பகுதிகளுக்கு செல்ல முடியாமல் அந்த பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இது பற்றி புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிகாரிகள் விரைவில் சாலையை சீரமைத்து தர முன்வருவார்களா?
-ஜெய்சங்கர், கோவில்புத்தூர், சேலம்.
===
திறந்தவெளி கிணறு மூடப்படுமா?

சேலம் மாநகராட்சி 12-வார்டு ராஜகணபதி நகரில் விநாயகர் கோவில் பின்புறத்தில் திறந்த வெளியில் கிணறு ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. சமீபத்தில் பெய்த மழையால் கிணறு முழுவதும் மழைநீர் நிரம்பி உள்ளது. அந்த பகுதியில் உள்ள சிறுவர்கள் ஆபத்தை உணராமல் கிணறு அருேக விளையாடி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து அந்த கிணற்றை இரும்பு கம்பி வேலி அமைத்து மூட வேண்டும்.

-ராஜன், மணக்காடு, சேலம்.
====

கண்காணிப்பு கேமரா அமைக்கப்படுமா?

சேலம் மாவட்டம் ஆத்தூர் உழவர் சந்தைக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த சந்தைக்கு வருபவர்கள் இரு சக்கர வாகனங்களை வெளியில் நிறுத்தி விட்டு பொருட்கள் வாங்க செல்கின்றனர். இதனை நோட்டமிடும் மர்ம நபர்கள் இரு சக்கர வாகனங்களை திருடிச்செல்கின்றனர். அதுபற்றி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் கண்டுகொள்ளவில்லை. எனவே  பாதுகாப்பு கருதி உழவர் சந்தையில் கண்காணிப்பு கேமரா பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சுப்பராயலு, ஆத்தூர்.
===
சேறும், சகதியுமான சாலை

சேலம் மாவட்டம் வீரபாண்டி ஓலைப்பட்டி புது காலனியில் பொது கழிப்பிடம், சாலை என எந்த அடிப்படை வசதியும் இல்லை. இங்குள்ள மண் சாலை மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் பொதுகழிப்பிடம் இல்லாததால் பெண்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுபற்றி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி சாலை, கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.

-ஊர் பொதுமக்கள், ஓலைப்பட்டி, சேலம்.
===
ஆபத்தான பள்ளம்

சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சி, புவன கணபதி கோவில் தெருவில் சாக்கடை கால்வாய் மூடாமல் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அந்த தெருவின் வளைவில் பள்ளம் ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இதற்கு விரைவில் நடவடிக்கை எடுத்தால் விபத்துகளை தவிர்க்கலாம்.

-கி.கோபால், புவன கணபதி கோவில் தெரு, சேலம்.
===
நோய் பரவும் அபாயம்

சேலம் அன்னதானப்பட்டி பாண்டு நகர் எஸ்.ஆர்.எம். தோட்டம் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். அங்குள்ள சாக்கடை கால்வாயில் செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் சாக்கடை நீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுத்தொல்லை அதிகரித்து துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. மேலும் நோய்பரவும் அபாயம் உள்ளதால் அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாயை சீரமைத்து தர முன்வருவார்களா?

-பொதுமக்கள், பாண்டுநகர், சேலம்.

Next Story