ஈரோடு மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தி: ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு


ஈரோடு மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தி: ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 3 Jan 2022 3:52 AM IST (Updated: 3 Jan 2022 3:52 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
கொடுமுடி
அனுமன் ஜெயந்தி நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகத்துடன், அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கொடுமுடியில் மிகவும் பிரசித்தி பெற்ற மும்மூர்த்திகள் தலமான மகுடேஸ்வரர் வீரநாராயணப் பெருமாள் கோவிலில் உள்ள வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் வெள்ளி காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் நேற்று அமாவாசை என்பதால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
கோபி
இதேபோல் கோபி அருகே மூல வாய்க்கால் ஸ்ரீதேவி பூதேவி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்டு வடைமாலை சாத்தப்பட்டு ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி சிறப்பு தீபாராதனைகள் காட்டப்பட்டன. இதில் கோபி, புதுப்பாளையம், பழைய வள்ளியாம்பாளையம், நல்லகவுண்டன்பாளையம், கரட்டடிபாளையம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு அனுமனை வழிபட்டு சென்றனர். மேலும் கோபி கடை வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலிலும் அனுமன் ஜெயந்தி நடந்தது.
கோபி அக்ரஹாரம் ஈஸ்வரன் கோவில் வீதியில் அமைந்துள்ள விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர் கோவிலில் விசாலாட்சி, விஸ்வேஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். மேலும் இக்கோவிலின் வெளிப்புறத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கு பால், தயிர், தேன், பன்னீர், இளநீர், சந்தனம் மற்றும் வாசனை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலரால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
கூகலூர்
கோபி அருகே கூகலூரில் ஈஸ்வரன் கோவில் வீதியில் சிவ பக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஆஞ்சநேயருக்கு பால், தயிர், தேன், பன்னீர், இளநீர், சந்தனம் மற்றும் வாசனை திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் ஆஞ்சநேயருக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு வடை, வெற்றிலை, பழங்கள் ஆகியவைகளால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் ராம ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு அனுமன் ஜெயந்தி நேற்று காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. பின்னர் பவானி ஆற்றில் இருந்து பக்தர்கள் குடங்களில் தீர்த்தம் எடுத்துக்கொண்டு் கோவிலுக்கு வந்து ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்தார்கள். அதன்பின்னர் சாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா அபிஷேகம் நடந்தது.
இதனைத்தொடர்ந்து 1,000 வடை மாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதேபோல் சத்தியமங்கலம் கடைவீதியில் உள்ள கருட ஸ்தம்ப ஆஞ்சநேயர் கோவிலில் சாமிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டது. பின்னர் 1,000 வடைகளை கொண்டு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சென்னிமலை
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சென்னிமலையில் ஈங்கூர் ரோட்டில் உள்ள செல்வ ஆஞ்சநேயர் கோவிலில் சாமிக்கு பால், தேன், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம் போன்ற பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.
அப்போது துளசி இலை மற்றும் வெற்றிலை அலங்காரத்தில் செல்வ ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் விழாக்குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் அமாவாசை தினமாக இருந்ததால் சென்னிமலை முருகன் கோவில் மற்றும் கைலாசநாதர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
ஊஞ்சலூர்
ஊஞ்சலூர் நாகேஸ்வரர் கோவில் அருகே உள்ள கொந்தளம் நாகேஸ்வரர் வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகத்துடன் அர்ச்சனை செய்யப்பட்டது. இதேபோல் வடக்கு புதுப்பாளையம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் உள்ள பால ஆஞ்சநேயருக்கு லட்டுக்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
மதியம் ஆஞ்சநேயருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது பக்தர்கள் “கோவிந்தா, கோவிந்தா” என்று கோஷம் எழுப்பினார்கள். கொளாநல்லி பூமி நீளா சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகத்துடன் அர்ச்சனை செய்யப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டு சென்றனர்.
சிவகிரி
சிவகிரி அருகே தலையநல்லூரில் உள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. பின்னர் வடைமாலை சாத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அம்மாபேட்டை
அம்மாபேட்டை ஈஸ்வரன் கோவில் செல்லும் வீதியில் காவிரி கரையோரம் ஜெய் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு அனுமன் ஜெயந்தியையொட்டி பால், தயிர், பஞ்சாமிர்தம், பஞ்சகாவியம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து வெற்றிலை மாலை சாத்தப்பட்டு மற்றும் பல்வேறு மலர்களால் ஆஞ்சநேயருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அனுமனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூர் தர்ம சாஸ்தா கோவிலில் அமைந்துள்ள பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகத்துடன் பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அந்தியூர்
அந்தியூர் அருகே பள்ளிபாளையத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகத்துடன் அலங்காரம் செய்யப்பட்டன. பின்னர் சாமிக்கு வடைமாலை, வெற்றிலை மாலை சாத்தப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது.
இதேபோல் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில், அத்தாணி கைகாட்டி பிரிவில் உள்ள 35 அடி உயரமுள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.
நம்பியூர்
நம்பியூர் அருகே பொலவபாளையம் பகுதியில் உள்ள ஆதி ஆஞ்சநேயர் கோவிலில் சாமிக்கு வடைமாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை சாத்தப்பட்டது. பின்னர் பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Next Story