விவசாயிகள் மின் இணைப்பு விண்ணப்பங்களை பதிவு செய்ய சிறப்பு முகாம்


விவசாயிகள் மின் இணைப்பு விண்ணப்பங்களை பதிவு செய்ய சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 3 Jan 2022 5:10 PM IST (Updated: 3 Jan 2022 5:10 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் வருகிற 6-ந் தேதி விவசாயிகள் மின் இணைப்பு விண்ணப்பங்களை பதிவு செய்ய சிறப்பு முகாம் நடக்க உள்ளது.

மயிலாடுதுறை:-

மயிலாடுதுறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் வருகிற 6-ந் தேதி விவசாயிகள் மின் இணைப்பு விண்ணப்பங்களை பதிவு செய்ய சிறப்பு முகாம் நடக்க உள்ளது. 
இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரிய மயிலாடுதுறை கோட்ட செயற்பொறியாளர் முத்துக்குமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

மின் இணைப்புகள்

சட்டசபையில் தமிழக முதல்-அமைச்சர் அறிவித்த ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் மார்ச் 2013 வரை பதிவு செய்த சாதாரண வரிசை விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 
அதன்படி ஏப்ரல் 2013 முதல் மார்ச் 2014 வரை பதிவு செய்தவர்களுக்கு ரூ.10 ஆயிரம் சுயநிதி திட்டத்தின் அடிப்படையிலும், 2014 முதல் 2018 வரை ரூ.500 பதிவு கட்டணம் செலுத்தி சுயநிதி திட்டத்தில் ரூ.50 ஆயிரம் செலுத்துவதற்கு சம்மதக்கடிதம் வழங்கியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு தயார்நிலை பதிவு செய்யும் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. 

சிறப்பு முகாம்

மேலும் தட்கல் விரைவு திட்டத்தின் மூலம் விவசாய மின் இணைப்பு பெற விருப்பம் உள்ள அனைவரும் மின் இணைப்பு பெற்றுக் கொள்ளலாம். சிறப்பு திட்டமாக மேற்கண்ட ஆண்டுகளில் பதிவு செய்த விவசாயிகள் விரைந்து பயன்பெறும் வகையில் பெயர்மாற்றம், புல எண் மாற்றம் மற்றும் கிணறு போர்வெல் மாற்றம் இருப்பின் அது தொடர்பான விண்ணப்பங்களை உடனடியாக பதிவு செய்து உரிய மாற்றம் செய்ய சிறப்பு முகாம் மயிலாடுதுறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் வருகிற 6-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. 
மயிலாடுதுறை கோட்டத்துக்கு உட்பட்ட நீடூர், திருவிழந்தூர், சோழசக்கரநல்லூர், மங்கநல்லூர், கிளியனூர், சங்கரன்பந்தல், மயிலாடுதுறை நகரம் மற்றும் புறநகர், மூவலூர், குத்தாலம், கோமல், பாலையூர், கடலங்குடி, மேக்கிரிமங்கலம் ஆகிய பிரிவு அலுவலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த விருப்பம் உள்ள அனைத்து விவசாயிகளும் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story