பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி


பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி
x
தினத்தந்தி 3 Jan 2022 5:49 PM IST (Updated: 3 Jan 2022 5:49 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் லலிதா தொடங்கி வைத்தார்.

பொறையாறு:-

மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் லலிதா தொடங்கி வைத்தார். 

ஒமைக்ரான் பரவல்

கொரோனா 3-வது அலையை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசியை போட்டு வருகிறது. இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தான் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இந்தநிலையில் ஒமைக்ரான் தொற்று பரவ தொடங்கி இருப்பதால் அதை கட்டுப்படுத்தும் நோக்கில் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள பளளி மாணவர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 
அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. இதற்கான நிகழ்ச்சி மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் உள்ள சம்பந்தம் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. 

கலெக்டர் தொடங்கி வைத்தார்

இதில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார். அப்போது நிவேதா முருகன் எம்.எல்.ஏ., மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பிரதாப்குமார், ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், வட்டார சுகாதார மருத்துவஅலுவலர் கார்த்திக் சந்திரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:- 

தடுப்பூசி

மயிலாடுதுறை மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 9.8 லட்சம் ஆகும். இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 7.50 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் முதல் தவணையாக 73 சதவீதம் பேரும், 2-வது தவணையாக 40 சதவீதம் பேரும் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். 2 தவணையும் முழுமையாக தடுப்பூசி போட்டால் மட்டுமே 95 முதல் 98 சதவீதம் வரை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும். 
இதற்கு பொதுமக்களும், மாணவ-மாணவிகளும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தடுப்பூசி பற்றிய தவறான கருத்துகளை பொதுமக்கள் ஏற்காமல் தடுப்பூசி போட முன்வர வேண்டும். 

அச்சமின்றி...

மாவட்டத்தில் 42 ஆயிரம் பேர் 15 முதல் 18 வயதுக்குக்கு உட்பட்டவர்கள். இவர்கள் அனைவரும் எந்தவித அச்சமும் இன்றி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் செம்பனார்கோவில் ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடேசன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், சுகாதாரத்துறையினர் கலந்து கொண்டனர்.

Next Story