கலெக்டர் அலுவலகம் முன்பு சமூக இடைவெளியின்றி நடந்த ஆர்ப்பாட்டங்கள் 18 பேர் மீது வழக்கு
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு வீட்டுமனைப்பட்டா கேட்டு சமூக இடைவெளியின்றி ஆர்ப்பாட்டம் செய்தது தொடர்பாக 18 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். இதில் மொத்தம் 379 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் 12 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்தநிலையில் கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆண்டிப்பட்டி தாலுகா பகுதியில் பஞ்சமி நில ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு, சொந்த வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும், கம்பத்தில் நத்தம் புறம்போக்கு நிலத்தை கோவில் புறம்போக்கு நிலத்தோடு சேர்த்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்டக்குழு உறுப்பினர் ஹஜ்முகமது தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்புக்குழு செயலாளர் இளையராஜா, மாவட்ட மைய நிர்வாகி கோபால், விடுதலை சிறுத்தைகள் கட்சி தேனி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டம்
ஜெய்பீம் புரட்சிப்புலிகள் அமைப்பின் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு, சீப்பாலக்கோட்டையில் 70 ஆண்டுகளாக குடியிருக்கும் மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு பொதுச்செயலாளர் அருந்தமிழரசு தலைமை தாங்கினார். இதில் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதுபோல், கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடத்த போலீசார் அனுமதி மறுத்ததாக கூறியும், போலீசாரை கண்டித்தும் நாட்டு மாடுகள் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் சங்க தலைவர் கலைவாணன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
வழக்குப்பதிவு
பெரியகுளம் அருகே ஏ.வாடிப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், "எங்கள் ஊரில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு தொடர்ந்து மனு கொடுத்து வருகிறோம். எனவே, வீடற்ற ஏழை, எளிய மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
இந்தநிலையில் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் செய்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்), ஜெய்பீம் புரட்சிப் புலிகள் ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் போலீசாரிடம் அனுமதி பெறாததோடு, சமூக இடைவெளியையும் கடைபிடிக்கவில்லை. பலரும் முக கவசம் அணியவில்லை. இதனால், கொரோனா நோய் தொற்று பரவும் அபாயத்துடன் ஆர்ப்பாட்டம் செய்ததாக கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 10 பேர், ஜெய்பீம் புரட்சி புலிகள் அமைப்பை சேர்ந்த 8 பேர் என 18 பேர் மீது தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story